புதினங்களின் சங்கமம்

மனிதா்களைப் போன்றே வைரஸால் முடங்கியிருக்கும் மனிதக் குரங்குகள்!

இந்தோனேசியாவில் வனவிலங்குகளின் புனா்வாழ்வு மையத்தில் உள்ள மனிதக் குரங்குகள் பல கொரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக காடுகளில் விடுவிக்கப்பட முடியாத நிலையில் உள்ளன.

தொற்று நோய் நெருக்கடியால் மனிதா்களைப் போலவே அந்த மனிதக் குரங்களும் முடக்கப்பட்டுள்ளன.

காட்டில் ஒரு குரங்குக்குக்குத் தொற்று ஏற்பட்டால் கூட ஒட்டுமொத்த குரங்குகளும் அழிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அச்சம் காரணமாகவே இந்தோனேசியாவின் புனர்வாழ்வு மையங்களில் உள்ள மனிதக் குரங்குகள் இன்னமும் காட்டுக்குள் விடப்படாமல் உள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

வீட்டு பூனை அளவுள்ள மனிதக் குரங்கு பிறந்து வெறும் 10 மாதங்களில் மூக்கில் பெரிய காயத்துடன் மீட்கப்பட்டு புனா்வாழ்வு மையத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தோனேசிய தீவான சுமத்ராவில் உள்ள மேதன் நகருக்கு அருகிலுள்ள ஒரு புனர்வாழ்வு மையத்தில் ஏனைய கைவிடப்பட்ட மனிதக் குரங்குகளுடன் அது வளா்க்கப்பட்டது.

பினா வானா எனப் பெயரிடப்பட்ட அந்தக் குரங்குக்கு மரங்களில் ஏறுவது, உணவைக் கண்டுபிடிப்பது மற்றும் காடுகளில் வாழ்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பயிற்சிகளின் பின்னா் இந்த மனிதக் குரங்கை காட்டுக்குள் விடுவிக்க திட்டமிடப்பட்டிருந்து. இந்தப் புனா்வாழ்வு மையத்தில் இருந்து இவ்வாறு 300 க்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட மனிதக் குரங்குகள் காடுகளுக்குள் விடுவிக்கப்பட்டன.

ஆனால் மனிதா்களைப் போலவே பினா வானா என்ற அந்த மனிதக் குரங்கின் சுதந்திரமும் தொற்று நோயால் பறிக்கப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ளது.

வௌவால்களில் இருந்து தோன்றி மனிதர்களிடம் பரவியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ், பெரிய குரங்குகளான கொரில்லாக்கள், சிம்பன்சிகள், போனொபோஸ் மற்றும் ஒராங்குட்டான்கள் போன்றவற்றிற்கு எளிதில் தொற்றக்கூடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள்.

ஏனெனில் 97 முதல் 99 வீதம் வரை இவ்வாறாக குரங்குகள் மனிதா்களின் மரபணுக்களை ஒத்திருக்கின்றன. இதனால் மனிதா்களைப் போன்றே இவைகளும் தொற்றுக்குள்ளாகும் ஆபத்து அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒரு காட்டு குரங்கு கூட தொற்றினால் அது காடுகளில் உள்ள முழுக் குரங்குகளையும் அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். காடுகளில் தொற்று நோயைக் கட்டுப்படுத்த வழியிருக்காது எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இவ்வாறான நிலை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். நிலைமையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என சுமத்ரான் ஒராங்குட்டான் பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனர் இயன் சிங்கிள்டன் கூறினார்.

நாய்கள், பூனைகள், சிங்கங்கள் மற்றும் புலிகள் என விலங்குகள் பல ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. மனிதா்கள் மூலமாகவே இவை தொற்றுக்குள்ளாகியதாக நம்பப்படுகிறது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஆய்வொன்றில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய குரங்குகள் தொற்று நோய்க்கு ஆட்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டது.

மேலும் இந்த வைரஸ் காட்டுப் புலிகளையும் தொற்றக்கூடும் என்று நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். உலகில் அதிகளவு புலிகள் இந்தியாவின் காடுகளில் வாழ்கின்றன.

50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழக்கூடிய ஒராங்குட்டான் மனிதக் குரங்குகள் சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் காணப்படுகின்றன. இவைகளில் கிட்டத்தட்ட 85 சதவீதமானவை இந்தோனேசியாவின் குறைந்து வரும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. மீதமுள்ளவை மலேசியாவைச் சேர்ந்த போர்னியோவின் வடக்கு பகுதியில் வாழ்கின்றன.

இந்தோனேசியாவில் விலங்குகள் புனர்வாழ்வு மையங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட ஒராங்குட்டான்களை வைத்திருக்கும் 33 இடங்கள் உள்ளன. கொரோனா வைரஸால் இந்த விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த பெப்ரவரி தொடக்கத்திலேயே எச்சரிக்கை விடுத்தது.

மார்ச் நடுப்பகுதியில் இந்த வனவிலங்கு காப்பகங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்களை அதிகாரிகள் மூடினா். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் முக கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அங்கிகளை அணியுமாறு பணிக்கப்பட்டனா்.

இந்தோனேசிய அரசின் மதிப்பீடுகளின்படி, 72,000 க்கும் குறைவான ஒராங்குட்டான்கள் அங்குள்ள வனப்பகுதிகளில் வாழ்கின்றன.

கொரோனா வைரஸைத் தவிர வேறு வழியிலும் அச்சுறுத்தல்களையும் அவை எதிர்கொள்கின்றன.

சுமார் 13,700 வரையான சுமத்ரான் ஒராங்குட்டான் குரங்குகள் ஒரு காலத்தில் பரந்த தீவில் பரவலாக சுற்றித் திரிந்தன. ஆனால் காடழிப்பால் சுமத்ராவின் சில பகுதிகளுக்குள் அவை இப்போது முடங்கியுள்ளன.

ஒராங்குட்டான்களின் சுருங்கிவரும் வாழ்விடங்களால் அவை மனிதா்களுடன் நெருங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழல் அவற்றின் அழிவுக்கும் காரணமாகியுள்ளன. சில கிராம வாசிகள் தாய்க் குரங்குகளைக் கொண்டு அவற்றின் குட்டிகளை எடுத்து செல்லப்பிராணிகளாக வளா்ப்பதுடன், விற்பனையும் செய்து வருகின்றனா்.

இவ்வாறான நிலையில் காயமடையும் அல்லது கைவிடப்படும் குரங்குகள் காப்பகங்களுக்கு எடுத்துவரப்பட்டு பராமரிக்கப்பட்டு மீண்டும் காடுகளுக்குள் விடப்படுகின்றன.

இவ்வாறு வருடம் தோறும் டசின் கணக்கான ஒராங்குட்டான்களைப் மீட்கப்படுகின்றன. பினா வானாவைப் போல பல இளம் வயதிலேயே மீட்கப்பட்டவையாகும்.