யாழில் மண் கடத்தல்காரர்களின் திருவிளையாடல் அம்பலம்!! பொலிசாருக்கு முன்னாலேயே மண் கொட்டப்பட்டது!! (Video)
மண் கடத்தல் மாபியாக்கள் எவ்வாறு பொலிஸாரையும் சட்டத்தையும் ஏமாற்ற முடியுமே அவ்வாறு ஏமாற்றி தங்களின் மண் கடத்தலை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றனர்.
சட்ட ஒழுங்குகளின் அடிப்படையில் பணியாற்றக் கூடிய பொலிஸாரால் இவர்களின் திருகுதாளங்களைச் சமாளிக்க முடியாதுள்ளது.
அவ்வாறான ஒரு சம்பவம்தான் வடமராட்சி கிழக்குப் பகுதியிலும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாங்கள் செய்த மண் கடத்தலைக் கண்டுபிடித்து விசாரணை செய்ய வந்த பொலிஸார் மீது தேவையற்ற விதமான முறையில் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு வந்த பொலிஸாருக்கு எதிராகத் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள், சிறுவர்களை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் மண் கடத்தல் மாபியாக்கள், பின் பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக வெளியுலகுக்கு காட்டுவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதனை அறிந்த, எதெற்கெடுத்தாலும் குறைசொல்லக் காத்திருக்கும் கூட்டம், பொலிஸாருக்கு எதிராக ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கும்.
பெண்களின் கைகளைப் பிடித்து இழுத்தாகவும், கட்டிப்பிடித்தாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் அங்கு நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி எவ்வாறு நம்ப வைக்க முடியுமோ அவ்வாறு கதைகளை எழுதி விடுகின்றன.
விசாரணைக்கென சென்ற பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகவுள்ள நிலையில், அவ்வாறு ஒத்துழைக்காதவிடத்து, இடையூறு விளைப்பவர்களைப் பொலிஸார் கைது செய்ய சட்டத்தில் இடம் உண்டு.
எனவே குற்றஞ்செய்யாதவர்களாக இருந்தால் விசாரணைக்கு தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கியிருந்தால் இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்க முடியும்.
எதுஎவ்வாறாயினும் மண் கடத்தல் மாபியாக்களிடம் இருந்து எமது நிலத்தை மீட்டு அடுத்த சந்ததியினருக்கு வழங்குவதென்பது தற்கால சூழ்நிலையில் கேள்விகுறியாகவேயுள்ளது.
கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பொலிஸார் துரத்துவதைக் கண்ட மண் கடத்தல் கும்பல், தங்களது வாகனங்களின் கதவுகளைத் திறந்து ஏற்றி வந்த மணலை வீதிகளில் கொட்டியவாறு பயணிக்கின்றனர்.
வாகனங்களிலிருந்து மண்ணைக் கொட்டி, சட்ட நடவடிக்கைக்கான சான்றுகள் கிடைக்காதவாறு செய்து பொலிஸாரிடம் இருந்தும் சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு தந்திரோபாயமே இது.