புதினங்களின் சங்கமம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்த 7 பேர் தொடர்பில் அரச அதிபர் எச்சரிக்கை!

கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வலி.மேற்கு பிரதேச சபைக்கு உள்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கோரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு அனைவரும் வழங்கிய தியாகம் இந்த நபர்களால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும்.

அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

இதேவேளை, குறித்த பகுதிகளிலிருந்து 7 பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வருவதற்கு மூன்று பாரவூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தகவல் கிடைத்துள்ளது.

அவற்றில் ஏற்றி வந்த பொருள்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவது அவசியமாகவுள்ளது என்றும் யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய பொருள்கள் தட்டுபாடின்றி கிடைக்கவேண்டும் என்ற காரணத்துக்கு பாரவூர்தி உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு பல தளர்வுகளும் வழங்கப்பட்டன.

எனினும் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அனுமதியை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் செயற்படக்கூடாது. சாரதிகள் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும். சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி அபாய வலயமான கொழும்பில் தங்கியிருந்தவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவதற்கு 3 பாரவூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அறியக்கிடைக்கிறது.

அவற்றில் ஏற்றிவரப்பட்ட பொருள்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவது அவசியமாகிறது. எனவே பாரவூர்திகள் தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை இறுக்கமாக்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் அவா் மேலும் தெரிவித்தாா்.