தனிமைப்படுத்தல் முகாம் நோய்க்காவியாக மாறியிருக்குமா? (செய்திப்பார்வை)
கொரோனா தொற்று யாழ்ப்பாணத்தில் நீங்கிவிட்டதால் விரைவில் ஊரடங்குச் சட்டம் நீங்கி அன்றாட தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்யலாம் என்று எண்ணியிருந்த யாழ்ப்பாண மக்களுக்கு நேற்று வெளியாகியிருந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்களின் மருத்துவ அறிக்கைகள் வெளியாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த எண்மருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதால் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுமா இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது.
உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல் நிலையில் திகழ்வதாக உலக சுகாதார அமையத்தின் தலைவராலேயே பாராட்டப்பெற்ற இலங்கை அரச இயந்திரம் சில விடயங்களில் தவறிழைக்கிறதா? என்ற கேள்வியை தனிமைப்படுத்தல் முகாம்களில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை முன்வைத்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் முதன்முதலில் தொற்றுக்குள்ளானவர் நாற்பது வயதுடைய தாவடியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர். அவருக்கு கொரோனாத் தொற்றுக்கான அறிகுறி காணப்படுவதாக தாமாகவே வைத்தியசாலைக்குச் சென்று நிலைப்பாட்டை அறிவித்து அவருக்கு உள்ள தொற்றினை உறுதிப்படுத்தியிருந்தார். குறிப்பு: சுவிஸ் மதபோதகருடனான சந்திப்பு ஒன்றில் மட்டுமே அவரும் பங்குகொண்டிருந்தார். ஆனால் குறித்த தாவடி நபருடைய குடும்பத்தார்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படாத போதிலும், சுவிஸ் போதகருடன் நெருக்கமான தொடர்பினை வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையில் இருபது பேர் அடையாளம் காணப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் கட்டம் கட்டமாக 14 பேர் கொரோனா தொற்றுக்கு உட்பட்டுள்ளமை பரிசோதனை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இன்று யாழ்ப்பாணத்தில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் முகாமில் தொற்றியிருக்காதா? என்ற சாரப்பட ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது. அதற்கு நேரடியாக பதில் வழங்குவதில் தயங்கிய பணிப்பாளர்,
தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை இராணுவத்தினரும், சுகாதாரத்துறையினருமே முன்னெடுத்துவருகின்றார்கள். அவற்றை அவர்கள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். எவ்வாறு இந்தத் தொற்று ஏற்பட்டது என்றும் தெளிவாகக் கூறிவிடமுடியாது. பாதிரியார் மூலம் வந்ததா, அல்லது அதில் (தனிமைப்படுத்தல் முகாமில்) தங்கியிருந்தவர்கள் மூலம் வந்ததா என்பதை தெளிவாகக் கூறிவிடமுடியாத நிலை காணப்பட்டாலும் கொரோனா தொற்று உள்ள ஒருவர் அல்லது சந்தேகத்திற்கு இடமானவர்கள் இருக்கின்றபோது அவர்கள் ஒருவரோடு ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியைப் பேணவேண்டும். தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் ஒன்றாகக் கூடுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் இல்லாது செய்யவேண்டும். என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில் தான் நாங்கள் ஏற்கனவே தலையங்கத்தில் குறிப்பிட்ட அரச இயந்திரம் தவறிழைக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டமைக்கான சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம்.
பலாலியில் காணப்படுகின்ற தனிமைப்படுத்தல் முகாம் ஒரு மேல் மாடி வீடு (படம் இணைக்கப்பட்டுள்ளது) குறித்த வீட்டிலேயே 20 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.
இருந்தபோதிலும் அந்த இருபது நபர்களும் தனித்தனி அறைகளில் கண்காணிக்கப்பட்டதாக தெரியவில்லை. சில ஊடகவியலாளர்கள் அந்தப் பகுதிகளில் சென்றபோது அந்த வீட்டில் இருந்த நபர்கள் வீட்டின் வெளிப்பகுதியில் முகத்திரை கூட இல்லாமல் சாதாரணமாக தென்பட்டதை அவதானித்ததாக சொல்கிறார்கள்.
ஆக, அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனித்தனியாக தனிமைப்படுத்தப்படாமல் விடப்பட்டிருந்தால், ஒருவருக்கு அல்லது ஒரு சிலருக்கு ஏற்பட்டிருந்த தொற்று அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த கொரோனா தொற்று இல்லாதவர்களையும் தொற்றியிருக்காது என்பதை நிராகரிக்கமுடியாது.
மட்டக்களப்பு புனானை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று சந்தேக நபர்களை தனிமைப்படுத்துவதற்காக இராணுவத்தினரால் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முகாம்களில் தொற்றுக்கு உள்ளானவர்களின் வீதம் குறைவாக காணப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக அக்கறை கொண்டு செயற்படும் அரசாங்கம், கொரோனாவை கட்டுப்படுத்த கோடிக்கணக்க்கான நிதி செலவிடப்படுகின்ற சூழலில் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுகின்ற மக்களின் செறிவினைக் கூட்டி முடிந்த அளவில் குறைந்த எண்ணிக்கையானவர்களை ஒவ்வொரு இடங்களிலும் பராமரிக்க நடவடிக்கை எடுப்பதால் இன்னமும் கூடுதலான தொற்றுக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நோக்கர்கள்.
– அருவி ஆசிரியர் பீடம் –

