புதினங்களின் சங்கமம்

யாழில் ஊரடங்கு வேளையில் தம்பதிகள் மீது தலையில் கோடரியால் கொத்தி கொள்ளை!!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது வயோதிபத் தம்பதிகளின் வீடு புகுந்த திருடர்கள், அவர்களைக் கோடாரியால் கொத்தித் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற சம்பவம் இன்று (10) அதிகாலை யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரியில் இன்று அதிகாலை வீடு புகுந்த திருடர்கள், சுமார் ஒரு மணித்தியாலம் வரை வீட்டில் தங்கியிருந்து நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

சாவகச்சேரி சோலையம்மன் கோவில் வீதியில் உள்ள வயோதிபத் தம்பதியினர் வசித்த வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் முகமூடித் திருடர்கள் நுழைந்துள்ளனர்.

வெளியில் திருடர்கள் சிலர் காவலுக்கு நிற்க இருவர் ஏணி வழியாக வீட்டுக்குள் குதித்துள்ளனர். தங்க நகைகள் எங்கே வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்டு வயோதிபத் தம்பதியினரை சித்திரவதையும் செய்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து சல்லடையிட்டுத் தேடுதல் நடத்தினர். இதன்போது கோடாரியால் குடும்பத் தலைவரின் தலையில் கொத்தியதுடன், அவரது கையையும் அடித்து முறித்துள்ளனர். அவரது மனைவியையும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். வீட்டிலிருந்த பத்து பவுண் நகையைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அதிகாலை 2.30 மணிக்குப் பின்னரே நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்திருந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.