புதினங்களின் சங்கமம்

கள்ளவிதானையும் கள்ள நாய்களும் !! வேட்டியை தூக்கி வெறும் குண்டி படத்தான் அமர்வார் .!!

பேரிடரை எதிர்கொள்வோம்  என்ற தலைப்பில் கொரோனாவின் தாக்கத்திற்காக பல பதிவுகளை எழுதிவரும் Vadakovay Varatha Rajan அவர்களின் முகப்புத்தகப் பதிவில் இருந்து ஒரு பகுதியை அப்படியே உங்களுக்கு தந்துள்ளோம்…

காலை 7 மணிக்கு சிங்காரியும் நாச்சியாரும் ஆக்ரோஷமாக குரைத்தன.
முன்புதான் ஊரடங்கு வேளையில் நாய் குலைத்தால் ஆமியோ போலீஸோ எனப்பயப்படவேண்டும் .இப்போ அந்த பயமில்லாமல் கேற்றடிக்கு சென்று பார்த்தேன் . அது பரமண்ணை .

“விதானை வீட்டை ஆரும் களவுக்கு வருவாங்கள் எண்டே உந்த பயங்கரங்களை வளக்கிறாய் ” என்றவாறே கேற்றை பிடித்தபடி பதறிக்கொண்டு நின்றார் .
சிங்காரியையும் நாச்சியாரையும் அடக்கியபடி கேற்றைத் திறந்தேன் .

பரமண்ணையை , பரமு என்றால் ஊரில் யாருக்கும் தெரியாது .
பறியாப்பரமு என்றாலே ஊராருக்குப் புரியும்
ஐந்து சதம் யாருக்கும் பறியார்.
நெய்க் கையால் பேப்பர் தொடார்.

வேட்டியுடன் வெளிக்கிட்டால் , வேட்டி தேய்ந்து போய்விடும் என்று வேட்டியை தூக்கி வெறும் குண்டி படத்தான் அமர்வார் .
அவளவு கஞ்சன் .
ஆனால் நல்ல பிராயாசி .70 வயதிலும் தோட்டம் செய்து வருமானம் பார்க்கிற விண்ணன்.
தடாலடி குத்தல் கதையில் மன்னன் .

“வாங்கோ அண்ணை என்ன வெள்ளாப்பிலை?”
வந்து திண்ணையை துவாய்த்துண்டால் தட்டிவிட்டு அமர்ந்தார் .
துவாய்த்தூண்டில் இருந்து தூசு பறந்தது .

“நீ நேற்று குரக்கன் செய்யிறதைப்பற்றி ஏதோ எழுதினியாம், பேரன் படிச்சுச் சொன்னான் அதுதான் விளப்பமாய் கேப்பமெண்டு வந்தனான் ”

“ஏதோ எனக்குத் தெரிந்ததை மற்றவைக்கும் சொல்லுவமெண்டு எழுதினன்”

“ஓமாம் ,நீ கண்டியிலை விவசாயம் படிச்சனியாம் ,பேந்தேன் உந்த கள்ளவிதானை வேலைக்கு போனனி ”
ஒவொரு தொழிலைப்பற்றியும் மக்களுக்கு பொதுவான ஒரு அபிப்பிராயம் இருக்கிறது . அதை மாற்ற முடியாது .
விதானை எண்டால் கள்ளன்
போலீசு என்றால் லஞ்சம்
ஆமி எண்டால் கொலைகாரன் .
இது பொதுப்புத்தியில் உறைந்தவை .
இதை மாற்றவே முடியாது .
இவைகளை பொருட்படுத்தி கோவிப்பதில் பயனில்லை .
விதி விலக்குகளை இவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் .

“நான் விதானையாய் வராட்டி உங்கடை பிள்ளையளை வெளி நாட்டுக்கு அனுப்பி இருப்பியளே”

“அதெண்டால் உண்மை , நீ செஞ்சதை சீவியத்திலை மறக்க மாட்டன் . சண்டேலை என்ரைவீட்டிலை ரெண்டோடுதான் உடைஞ்சது .
நீ முழுவீடும் உடைஞ்சது எண்டு கடிதம் தந்த படியால்த்தான் பெரியவனை ஜெர்மனியிலை ஏத்துக் கொண்டாங்கள் .
சின்னவன் வெறியிலை நீர்வேலியிலை அடிபட்டு போலீசுக்கு ஒளிச்சுத்திரிந்ததை வைச்சு நீ இவரை போலீஸ் தேடுது எண்டு கடிதம் தந்ததாலைதான் பிரன்சிலை அவன்ரை வழக்கு வெண்டுது.
இதை எல்லாம் மறப்பனே”

“சரி வந்த விஷயத்தை சொல்லுங்கோ ”

“நான் கொஞ்ச சாமி விதைப்பம் எண்டு பாக்கிறான் ”

“அது நல்ல விசயமெல்லே , சாமி, தினை எண்டால் அதுகள் ஒரு 65 , 70 நாளிலை விளைஞ்சிடும் . கொஞ்ச நாளிலை வருமான மண்ணை .”

“மெய்யாய்த்தான் சொல்லுறியோ ? அப்ப என்ரை நாலு பரப்புக் காணிக்கு விதைக்க எவ்வளவு சாமி தேவை ”

“நாலு பரப்பெண்டால் கால் ஏக்கர் .ஒரு முக்கால் கிலோ சாமி காணுமண்ணை”

“நான் முன்னை பின்னை சாமி விதைக்கேல்லை என்னண்டு மோனை விதைக்கிறது ”

“ஒரு 30 சென்றிமீற்றர் —–”

“உந்த செண்டுக் கணக்கை விட்டுட்டு இஞ்சிக் கணக்கிலை சொல்லு ”

“சரி வரிசைக்கு வரிசை ஒரு பத்து இஞ்சி இடைவெளிலை வரிசையாய் விதையுங்கோ .
முளைச்சு கொஞ்சம் வளந்தாப் பிறகு நாலுஞ்சி இடைவெளியிலை பயிர் இருக்கிற மாதிரி மற்றதுகளைப் பிடுங்கி விடுங்கோ.”

” நாலு பரப்பிலை எவளவு விளையும் மோனை ”

“ஒரு 150 தொடக்கம் 200 கிலோ வரை விளையுமண்ணை ”

“அது சரி உந்த ஊரடங்கு சட்ட நேரத்தில விதைக்கு நான் எங்கை போவன்”

“அண்ணை உவர் மணியண்ணேன்ரை பேரப்பெடியன் குருவியள் வளக்கிறான் எல்லே , அவனிட்டை கட்டாயம் சாமி தினை எல்லாம் இருக்கும் அவனிட்டை கொஞ்சம் கேட்டுப் பாருங்கோ ”

“உதுதான்ரா கள்ள விதானைப் புத்தி எண்ணுறது .நான் இப்பவே போய் கேக்கிறேன்”
என்றவாறு எழுந்து தனது பழைய செருப்பை விட்டு விட்டு எனது புதிய செருப்பைக் கொழுவினார்.

இதுவரை அவரையே அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த சிங்காரி சடார் எனப்பாய்ந்து பரமண்ணையின் சாரத்தை கௌவியது .

கள்ளவிதானையும் கள்ள நாய்களும் என புறுபுறுத்தபடி தனது ஊசி குத்திய பழைய செருப்பைப் போட்டபடி கிளம்பினார் பரமண்ணை .