இலங்கையில் கோரோனா நோயாளர் எண்ணிக்கை 117ஆக உயர்வு!!
ஏப்ரல் 27 வரை ஊரடங்கு நீடிக்கும்?? இலங்கை மருத்துவ நிபுணர் கூறுகின்றார்!!
கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் கொழும்பு – அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் இன்று மாலை சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளிலிருந்து தலா ஒருவரே இவ்வாறு கோரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் நாட்டில் கோரோனா தொற்றுக்குள்ளாகியோர் எண்ணிக்கை 117ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கோரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் முழுமையாகக் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது கோரோனா தொற்றுக்குள்ளாகிய 105 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கோரோனா தொற்றுக்குள்ளாகிய 117 பேர் இன்று வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இன்று இரண்டு பேர் உள்பட 11 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.
கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 29 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். களுத்துறையில் 17 பேர், புத்தளத்தில் 11 பேர், கம்பஹாவில் 10 பேர், இரத்தினபுரியில் 4 பேர், யாழ்ப்பாணம், குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, மாத்தறை, கண்டி சிலாபம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருமாக 117 பேர் கோரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 117 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களின் குருதி மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. அதில் அவர்களுக்கு கோரோனா தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டால் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு புனாணை மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வந்த 77 பேரைக் கொண்ட குழுவின் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இவர்கள் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள்.
இராணுவ மற்றும் தனியார் பேருந்துகளில் இவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுவரையில் சுமார் ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை நிறைவு செய்து வீடுதிரும்பியுள்ளனர்.

