புதினங்களின் சங்கமம்

இலங்கையில் மின் தடை இன்றுடன் முடிவுக்கு வருகின்றது?? உண்மையா??

புத்தாண்டு பண்டிகை காலத்தில் தங்கு தடையின்றி மின் விநியோகம்…!

சிக்கனமாகப் பாவித்து ஒத்துழைத்தால் மின் கட்டணம் குறைக்கப்படும்….!

500 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்…!

மின்சாரத் துண்டிப்பு நாளை பத்தாம் திகதியுடன் முடிவுக்கு வருமென்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரத்தைப் பெற்றுக்ெகாடுப்பதற்கு சகல நடவடிக்ைககளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.500 மெகாவோட் மின்சாரத்தை குறைநிரப்பு அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கோரப்படுமென்றும் மின்சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.

மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மின்சக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கவே 500 மெகாவோட் மின்சாரத்தை வாங்க வேண்டியுள்ளது. அதன் மூலம் தற்போதைய மின்வெட்டு எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் முடிந்து விடும்.எதிர்வரும் சிங்கள , தமிழ் புத்தாண்டு காலத்தில் எந்தவித மின் வெட்டும் இருக்காது. அத்துடன் வெசாக் காலத்தில் பந்தல்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

தனியாரிடமிருந்து கிடைக்கும் 500 மெகாவோட் மின்சாரம் ஒரு யுனிட் 25- தொடக்கம் 26 ரூபா என்ற அளவில் எதிர்வரும் 1முதல் 2 வருடங்களுக்கு கிடைக்கும். இதற்கான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. யாரிடம் இருந்து இந்த மின்சாரத்தை கொள்வனவு செய்கிறோம் என்பதை அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் வெளியிடுவோம்.

களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் இருந்து கிடைக்கும் 1 யுனிட் மின்சாரத்துக்கு 37 ரூபா முதல் 39 ரூபா வரை செலவாகிறது. எனவே, மிகை நிரப்பு மின்சாரத்தை பெறுவது லாபமானது. இது ஒரு தற்காலிகத் தீர்வேயாகும்.

எனினும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பாவிக்குமாறு மக்களிடம் தொடர்ந்து நாம் கேட்டுக்கொள்கிறோம். மின்சாரத்தை வீணடிப்பது குறைக்கப்பட வேண்டும். இப்போது கூட காலை 10 மணிவரை வீதி விளக்குகள் எரிவதை காண முடிகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

புதிதாக மூன்று அனல் மின்சார நிலையங்கள் வரவுள்ளன. அதில் இரண்டு நுரைச்சோலையிலும் திருகோணமலை பெனல் பொய்ன்டிங் ஒன்றும் வரப்போகின்றது. இந்த மூன்று மின் நிலையங்களும் 2025 இல் அல்லது அதற்கு முன் செயற்படுத்தப்பட வேண்டும். இவை அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கிடையிலான முதலீடுகள் ஆகும். ஆனால் எந்தெந்த நாடுகள் இந்த முதலீடுகளை செய்கின்றன என்பது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

திருகோணமலை பெனல் பொய்ண்டிங் அமையவுள்ள மின்சார நிலையம் ஒவ்வொன்றும் 300 மெகா வோட் மின்சாரத்தை கொண்ட இரு அலகுகள் கொண்டதாகும். நுரைச்சோலையில் வரப்போகும் 2 மின் நிலையங்கள் தற்போது இருக்கும் அலகொன்றின் நீடிப்பு ஆகும். அத்துடன் அதில் ஒன்று இக்கட்டான நேரங்களில் உதவி வழங்கும் பணியை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் முன்னர் பிரேரித்திருந்த நிலக்கரி மின்னுற்பத்தி பற்றி நிருபர்கள் கேள்வியெழுப்பிய போது, மேற்கூறிய கொள்கை இப்போது கட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் அனல் மின்னை பயன்படுத்தும் வகையில் அந்தக் கொள்கை மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நீண்ட கால பிரேரணையில் மூன்றில் ஒரு பகுதி அனல் மின் மற்றும் நீர் மின் உள்ளிட்ட மீளுருவாக்க மின் சக்தி என்று இப்போது மாறியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேநேரம் ஒரு யுனிட் நிலக்கரி மின்சாரம் 12 ரூபாவுக்கும் குறைவாக கிடைக்கிறது. அதேநேரம் நீர் மின்சாரமே மிகவும் குறைந்தது. ஒரு யுனிட் நீர் மின்சாரம் ரூபா 1.80 க்கு கிடைக்கிறது என்று அமைச்சர் விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும், 2012க்குப் பின்னர் ஒரு மெகா வோட் மின்சாரம் கூட தேசிய மின்னோட்டத்தில் சேர்க்கப்படவில்லை. 2012 முதல் சூரிய மற்றும் காற்றாலை மூலமான 760 மெகாவோட் மீளுருவாக்க மின்சாரம் தேசிய மின்னோட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் எமது மின்சார தேவை 300 மெகா வோட்டால் அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

2019 இல் இடம்பெறும் மின்சார சிக்கல் பற்றி 2016 லேயே எதிர்வுகூறிய போதும் சரியான நேரத்தில் தீர்மானமெடுக்க அரசியல்வாதிகள் தவறி விட்டதே இப்போதைய சிக்கலுக்கு காரணமாகும். தற்போதைய மின்சார சிக்கலில் 65 சத வீதம் அரசியல் அதிகாரிகளினாலேயே ஏற்பட்டுள்ளன. இதற்கு யார் பொறுப்பு என்பது இன்னும் ஆறு மாதகாலத்தில் தெரியும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இதேநேரம், இயற்கை திரவ வாயு மின் நிலையங்களை அமைப்பது பற்றி ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நுரைச்சோலை மின் நிலையமும் ஒரே நேரத்தில் பழுதடைந்ததன் காரணமாகவே தற்போதைய மின்சார சிக்கல் நிலை ஏற்பட்டது.அதேநேரம் மின்சார உற்பத்திக்கு நீரைத் திறந்து விட மகாவலி அதிகார சபையும் மறுத்துவிட்டது. நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே மகாவலி அதிகார சபை இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.

இலங்கை மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான மோதல் இன்றைய அமைச்சரவையில் ஆராயப்பட்டு அதனைத் தீர்ப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

வீட்டுப்பாவனையாளர்களுக்கான மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்று கூறிய அமைச்சர், முடிந்தால் அது 2021 ஆம் வருடமளவில் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.