ஹிஸ்புல்லாவின் கிழக்கு பல்கலைக்கழகம் கொரோனா மையமாக மாற்றப்படவில்லை – கருணா (Video)
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை பொய்யான தகவல்கள் என்றே நான் கருதுகின்றேன். இதற்கு அரசாங்கம் பதில் வழங்கும் என எதிர்பார்க்கின்றேன். கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் இலங்கையில் மிகவும் குறைவு.
இவ்வாறான நிலையில், இந்த செய்தி தேர்தலுக்காக பரப்பப்பட்ட வதந்தி என்றே நாம் பார்க்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

