புதினங்களின் சங்கமம்

உதவியாளர் லொறியுடன் எரிப்பு; சாரதி மன்னாரில் கைது!

திருகோணமலை – பாலம்போட்டாறு பகுதியில் லொறியின் உதவியாளரை தீ மூட்டி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த சாரதி இன்று (05) இரவு மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47-வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அவரது மனைவியான கௌரி மனோகரி (37-வயது) என்பவரையும் தம்பலகாமம் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 1ம் திகதி பாலம்போட்டாறு பகுதியில் எரிந்த நிலையில் காணப்பட்ட லொறியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். கந்தசாமி யோகநாதன் என்பவரே லொறியின் சாரதி, அவரே சடலமாக மீட்கப்பட்டார் என்றும் முன்னதாக தெரியவந்தது.

இதேவேளை விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிஸார் லொறியில் பயணித்த உதவியாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் உதவியாளர் அதே பகுதியைச் சேர்ந்த ஹேவகே விஜேதாஸ (52-வயது) என்பவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது.

இந்நிலையில் லொறியில் பயணித்த சாரதி தொடர்பில் சந்தேகம் எழுந்த நிலையில் சாரதியின் வீட்டில் அவரது மரணம் தொடர்பில் மரண அறிவித்தல் பதாதைகள் போடப்பட்டிருந்த நிலையில் சாரதியான கந்தசாமி யோகநாதன் உதவியாளரை லொறியில் வைத்து தீ மூட்டி எரித்துவிட்டு ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சாதரியை பொலிஸ் விசேட குழு மன்னாரில் வைத்து இரவு 7 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இதேவேளை உதவியாளரின் சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மரபணு சோதனைக்காக உடற்பாகங்கள் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.