புதினங்களின் சங்கமம்

ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடல்: நீதிபதி உடனடியாக பதவி நீக்கம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் நீதிபதி தம்மிக்க ஹேமபாலவை நீதிச்சேவை ஆணைக்குழு சேவையிலிருந்து உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் இன்று (வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க, நீதிபதி கிஹான் பிலப்பிடிய மற்றும் நீதவான் ஹேமபாலவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி தம்மிக்க ஹேமபால சேவையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இதில் மூன்று நீதிபதிகளின் குரல் பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

நீதிபதிகள் தம்மிக்க ஹேமபால, கிஹான் பிலப்பிட்டிய, பத்மினி ரணவக்க ஆகியோரின் குரல் பதிவுகள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக நீதிச்சேவை ஆணைக்குழுவினால், ஜனாதிபதிக்கு பரிந்துரையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 112ஆவது பிரிவின் (அ) பகுதி அவரால் மீறப்பட்டுள்ளதாக அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.