புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தரின் திருவிளையாடல்!!

மக்களுடன் அடாவடியாக நடந்துகொள்ளும் சமுர்த்தி அலுவலர் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் நேற்றைய தினம் (08.01.2020) காலை 9.00 மணியளவில் சமுர்த்தி பயனாளிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர் மக்களை சரமாரியாக திட்டித் தீர்த்ததுடன் அவர்களை வெளியில் தள்ளி கதவினையும் அடைத்துள்ளார் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சாளம்பைக்குளம் 2017C கிராம சேவகர் பிரிவில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (08.01.2020) காலை 9.00 மணிக்குச் சமுர்த்திப் பயனாளிகளுக்கான கூட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டிருத்தது. அதனடிப்படையிலேயே மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இதன்போது குறித்த உத்தியோகத்தர் தனக்கு விசுவசமான ஒருசிலரை மாத்திரம் உள்ளே அனுமதித்து விட்டு ஏனையவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். கூடியிருந்த சமுர்த்தி பயனாளிகள் தர்க்கத்தில் ஈடுபட முனைந்தபோது கதவினை சாத்திவிட்டு உள்ளே இருந்து கொண்டுள்ளார் எனவும் நீண்ட நேரம் வெளியில் காத்திருந்த மக்கள் கதவு திறக்கப் படாமையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதுபோன்ற அடாவடி அலுவலர்களுக்கு எதிராக புதிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மக்கள் தமக்குள் பேசிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதேவேளை கூட்டம் காலை 8.30 மணிக்கு என்று அறிவித்ததாகவும் 9.15 ற்கு பின் வந்த மக்களையே வெளியில் நிறுத்தி கதவை அடைத்து கூட்டத்தை நடாத்தியதாகவும் வேறு சில கிராம மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது