புதினங்களின் சங்கமம்

சஜித் – கோத்தபாய அனைவரும் எங்களுக்கு ஒன்றுதான்! ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா கூறுகின்றார்!!

எங்களைப் பொறுத்தவரையில் சஜித், கோத்தபாய, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க அனைவரும் ஒன்றுதான், இவர்கள் யாரும் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர மாட்டார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஓட்டமாவடியில் நேற்று இரவு இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தினை தயாரித்துள்ளோம். நாங்கள் யாருடைய முகவர்களுமல்ல. கோத்தா மற்றும் சஜித்தினுடைய முகவர்களல்ல.

எங்களைப் பொறுத்தவரையில் சஜித்தும் ஒன்றுதான் கோத்தபாயவும் ஒன்றுதான், மகிந்தவும் ஒன்றுதான். இவர்கள் யாரும் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வருபவர்கள் அல்ல.

நாங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்திருக்கின்றோம். சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்திருக்கின்றோம். அமைச்சர்களாக அதிகாரத்தில் இருந்தோம், ஆளுநராக இருந்தோம். ஆனால் முஸ்லிம் சமுதாயம் அழிக்கப்படுகின்ற, அடிக்கப்படுகின்ற, உரிமைகள் மறுக்கப்படுகின்ற, பள்ளிவாசல்கள் எரிக்கப்படுகின்ற, முஸ்லிம் சமுதாயம் படுகொலை செய்யப்படுகின்ற, கோடிக்கணக்கில் சொத்துக்கள் எரிக்கப்பட்ட போதெல்லாம் நாங்கள் அமைச்சர்களாகத்தான் இருந்தோம். எங்களால் அவற்றை தடுக்க முடியவில்லை.

எங்களது பதவிகளை கொண்டு எதையும் செய்ய முடியவில்லை. கடந்த காலங்களில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு புதிய வியூகத்தில் எமது சமுதாயத்தினை கொண்டு செல்வதற்கு நிறைய கலந்துரையாடல்கள் நடத்தினோம்.

இவ்விடயமாக உலமாக சபைகள், கல்வியியலாளர்கள், தௌபீக் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட அமைப்புகளுடன் ஐம்பதுக்கு மேற்பட்ட கலந்துரையாடல்களை நடத்தினோம்.

இதற்கு பின்னர் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டோம். உண்மையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர். போட்டியிட்டு இருந்தால் மிக வேகமாக இந்த தேர்தல் களத்தினை சந்தித்திருக்க முடியும்.

மிகவும் பயங்கரமான, நெருப்பு குழிக்குள் காலை விட்ட ஒரு பயங்கரமான சூழ்நிலையில் தான் களத்தில் இறங்கியுள்ளேன். தேர்தல் மனு தாக்கலுக்கு முன்பு எமது முஸ்லிம் மக்கள் என் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்கள்.

பல்கலைக்கழகம் பறிக்க போராட்டம் செய்த போது எனக்காக துஆ செய்தார்கள், அளுநர் பதவியை பறிக்க போராட்டம் செய்த போது முஸ்லிம் சமூகம் அழுதது. தேர்தல் மனுதாக்கல் செய்து முஸ்லிம் வேட்பாளராக நிறுத்தப்பட்டேனோ உடனடியாக அனைவரும் என்னை விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.

என்னை துரோகி என்கின்றார்கள், பச்சோந்தி என்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் வாக்கை பிரிக்க வந்த காட்டிக் கொடுக்கும் துரோகி என்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் எல்லாம் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிசாட் பதியூதீன், அமைச்சர் அமீர் அலி, அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மேடைக்கு வந்தால் எனக்கு மாத்திரம் திட்டிப் பேசுகின்றார்கள்.

இவர்கள் சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பற்றி பேசுவதில்லை. நான் தான் ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுவது போன்று ஏசுகின்றனர்.

ஜனநாயக நாட்டில் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகின்ற உரிமை எனக்கு இருக்கின்றது. நீங்கள் மேடைகளில் உங்களது பிரசாரங்களை செய்யுங்கள்.

உங்களது கொள்கை என்ன, ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றீர்கள் என்று சொல்லுங்கள். நான் சஜித் பிரேமதாசவுக்கு எதிராகவோ, கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாகவோ இந்த தேர்தல் களத்தில் இறங்கவில்லை. நாங்கள் முஸ்லிம் சமூகத்தினுடைய முகவர்.

கடந்த முப்பது வருடம் வாக்களித்தோம், சில்லறை வியாபாரத்தை செய்தோம். சொத்துக்கள் மற்றும் மூலதனங்கள் என்பவற்றை இழந்து இன்று ஓட்டாண்டியாக முகவரி இல்லாமல் வீதியில் நிற்கின்றோம்.

தேர்தல் முடிந்ததும் முஸ்லிம் சமூகத்திற்கு எல்லா தடைகளையும் போடுவதற்கு சில தீவிரவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நாட்டில் எண்பது வீதமான சிங்களவர்கள் வாழ்கின்றார்கள் ஆறாயிரம் பன்சலைகள் உள்ளன. ஆனால் பத்து வீதமான முஸ்லிம்களுக்கு இரண்டாயிரம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன.

அவர்களுக்கு அறுநூறு பள்ளிவாசல்கள் தான் தேவை. தேர்தல் முடிந்ததும் மிகுதி பள்ளிவாசல்களை மூட வேண்டும் என்று ஒரு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எமது முன்னோர்கள், மூதாதையர்கள் பெற்றுத் தந்த உரிமைகளை பறிப்பதற்கு சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பக்கமுள்ள தீவிரவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த சூழலில் தான் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம். முஸ்லிம் சமூகத்தினுடைய சகல பிரச்சினைகளையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும்.

தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டதன் பிற்பாடு இந்த நாட்டிலுள்ள சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து இருபது பேர் கொண்ட குழுவினர் சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் பேசுவார்கள். நாங்கள் தனிநாடு, வடக்கிழக்கு இணைக்க கேட்பதும் இல்லை.

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுங்கள் என்று கேட்பதுமில்லை. சமஸ்டி ஆட்சி தாருங்கள் என்று கேட்பதுமில்லை. அதிகார பரவலாக்கம் செய்யுங்கள் என்று கேட்பதுமில்லை. இந்த நாட்டில் முஸ்லிம்கள் மானத்தோடு, மரியாதையோடு, கௌரவத்தோடு, நிம்மதியாக ஐந்து நேரம் பள்ளிவாசலில் தொழுகை செய்து கொண்டு எமது மார்க்க விழுமியங்களை பேணிக் கொண்டு வாழ வேண்டும் என்று விஞ்ஞாபனத்தில் கேட்டுள்ளோம்.

எந்த வேட்பாளர் எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கே எங்களது இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவது என்று தீர்மானிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.