Home புதினங்களின் சங்கமம் அவுஸ்திரேலியாவில் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்த இலங்கை வைத்தியர்!

அவுஸ்திரேலியாவில் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்த இலங்கை வைத்தியர்!

இலங்கையின் கிழக்கு மாகாணம், மருதமுனையைச் சேர்ந்த வைத்தியர் வஜ்னா ரபீக், 2026 ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவின் மிக உயரிய மருத்துவ விருதுகளான RACGP விக்டோரியா மாநிலத்தின் ‘சிறந்த பொது வைத்தியர் மற்றும் ‘சிறந்த பொது மருத்துவ நிலையம்’ ஆகிய இரட்டை விருதுகளை வென்று சரித்திரம் படைத்துள்ளார்.
மருதமுனையில் பிறந்து கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற இவர், நாட்டின் போர்ச்சூழல் காரணமாகக் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து களனிப் பல்கலைக்கழகத்தில் 1996-ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார்.
பின்னர் பிரித்தானியாவிற்குச் சென்ற இவர், ஆரம்பத்தில் மருந்தகம் ஒன்றில் சாதாரண உதவியாளராகப் பணியாற்றி, தனது விடாமுயற்சியால் லண்டன் வைத்தியசாலைகளில் வைத்தியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2007-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த வைத்தியர் வஜ்னா ரபீக், 2012-ஆம் ஆண்டு மெல்பேர்ன் கிரேகிபேர்ன் பகுதியில் வெறும் இரண்டு அறைகளுடன் ‘ஹான்சன் மருத்துவ நிலையத்தை ஆரம்பித்தார்.
இன்று 19 வைத்தியர்களுடன் சுமார் 80,000 நோயாளிகளுக்கு வருடத்தின் 365 நாட்களும் சேவையாற்றும் பிரம்மாண்ட மருத்துவ நிலையமாக இது வளர்ந்துள்ளது.
குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு மெல்பேர்னில் ஏற்பட்ட இடியுடன் கூடிய ஆஸ்துமா அவசரநிலையின் போது, அதிகாலை 3 மணி வரை நிலையத்தைத் திறந்து வைத்து சுமார் 300 நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய இவரது அர்ப்பணிப்புப் பெரிதும் பாராட்டப்பட்டது.
மேலும், அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த 30 வெளிநாட்டு வைத்தியர்கள் உட்பட மொத்தம் 51 வைத்தியர்களுக்குப் பயிற்சியும் வழிகாட்டலும் வழங்கி அவர்களின் எதிர்காலத்தை இவர் உருவாக்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உச்சத்தைத் தொட்ட போதிலும், தனது தாய்நாடான இலங்கையுடனான பிணைப்பைத் துண்டிக்காமல் தொடர்ந்து இலங்கையிலும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார்.
“உண்மையான வெற்றி என்பது உச்சத்தை அடைவது மட்டுமல்ல, சவால்களைத் தாண்டி மற்றவர்களையும் கைதூக்கி விடுவதே” எனத் தனது சாதனைப் பயணம் குறித்து அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மருதமுனையில் தொடங்கி மெல்பேர்ன் வரை நீளும் வைத்தியர் வஜ்னா ரபீக்கின் இந்த அசாத்திய பயணம், உலகெங்கும் வாழும் இலங்கை மக்களுக்குப் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments