கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட, கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து வீட்டுத்திட்டத்தில் மக்கள் பாவனையில் உள்ள பொதுக் கிணற்றுக்குள், அடையாளம் தெரியாதவர்களால் இறந்த நாய் ஒன்று வீசப்பட்டுள்ளது என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாகப் பொதுமக்கள் குடிநீர்
மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான வறட்சிச் சூழ்நிலையிலும் குறித்த ஐந்து வீட்டுத்திட்டப் பொதுக் கிணற்றில் நீர் வற்றாது காணப்பட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த பல குடும்பங்கள் இக்கிணற்று நீரையே நம்பித் தமது நீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தன.
இந்த நிலையில், அக்கிணற்றில் இறந்த நாய் வீசப்பட்டதன் காரணமாக அதன் நீர்
முற்றிலும் மாசடைந்து, பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த முடியாத அவலநிலை
ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் சுகாதாரத் திணைக்களத்திற்கு எழுத்துப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்பட்டு, கிணற்றை உடனடியாகச் சுத்தம்
செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கடிதத்தின் பிரதிகள் மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச சபை, மத்திய சுற்றாடல்
அதிகாரசபை மற்றும் கிளிநகர் கிராம அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்
கிணற்றுக்குள் வீசப்பட்ட நாய் அழுகி கரைந்து போய்விட்டது என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.





