Home புதினங்களின் சங்கமம் இலங்கையில் விண்வெளிப் பொறியியல் மற்றும் மருத்துவக் கற்கைகளைத் தொடங்கப் பிரித்தானியா வாழ் பேராசிரியர் சர் நிஷான்...

இலங்கையில் விண்வெளிப் பொறியியல் மற்றும் மருத்துவக் கற்கைகளைத் தொடங்கப் பிரித்தானியா வாழ் பேராசிரியர் சர் நிஷான் கனகராஜா திட்டம்!

இலங்கையில் விண்வெளிப் பொறியியல் மற்றும் மருத்துவக் கற்கை நெறிகளைத் தொடங்குவதற்குப் பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் சர் நிஷான் கனகராஜா திட்டமிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் தமிழ் மொழியில் கல்வி கற்று, இன்று பிரித்தானியாவின் முன்னணிப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக உயர்ந்துள்ள அவர், இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து இது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கையில் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் சுமார் 25 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே அரச பல்கலைக்கழக வாய்ப்புகள் கிடைக்கும் நிலையில், எஞ்சிய 75 சதவீத திறமையான மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மருத்துவ ஆராய்ச்சியில் பிரித்தானியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள தமது பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கற்கைகள் மற்றும் விண்வெளிப் பொறியியல் பட்டப்படிப்புகளை இலங்கையில் அறிமுகப்படுத்துவது குறித்துப் பிரதமருடன் ஆலோசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவுக்குச் சென்று அதிக செலவில் கல்வி கற்பதற்குப் பதிலாக, குறைந்த செலவில் இலங்கையிலேயே சர்வதேச தரத்திலான பட்டப்படிப்புகளை வழங்குவதே தமது இலக்கு எனப் பேராசிரியர் சர் நிஷான் கனகராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்புக்கு வெளியே உள்ள அனுராதபுரம், மட்டக்களப்பு போன்ற பிரதேச மாணவர்களும் பயன்பெறும் வகையில், இணையவழி மற்றும் நேரடி வகுப்புகளை இணைத்த கலப்புக் கல்வி முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தெளிவான ஒழுங்குமுறைகளும் விரைவான அனுமதிகளும் கிடைக்கும் பட்சத்தில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், தொழிற்கல்விக்கும் பட்டப்படிப்புக்கும் இடையிலான சமநிலையை உருவாக்குவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறைகளை வலுப்படுத்துவது குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தனது தாய்நாட்டுக்கு ஏதேனும் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாம் இந்த முயற்சியை முன்னெடுப்பதாகவும், இதன் மூலம் ஏனைய சர்வதேச பல்கலைக்கழகங்களும் இலங்கைக்கு வர வழிபிறக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாரம்பரிய பல்கலைக்கழக வாய்ப்புகளை மட்டுமே நம்பியிருக்காமல், தொழிற்கல்வி மற்றும் தொழில்முனைவோர் போன்ற மாற்றுப் பாதைகளையும் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments