கனடா பிராம்ப்டனில் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட வயோதிப பெண்ணிடம் பெருந்தொகை நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 78 வயதுடைய மூதாட்டியிடமிருந்து 20,000 டொலர் பெறுமதியான தங்க நகைகள் தந்திரமாக திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 28 அன்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலம் சரியாக பேசத் தெரியாத இந்த மூதாட்டியை அணுகிய பெண் ஒருவர், அவரை தெரிந்தவர் போல் நடித்து, கால்களைத் தொட்டு வணங்கி, கட்டி அணைத்துள்ளார்.
அந்த 10 வினாடி இடைவெளியில் மூதாட்டி அணிந்திருந்த உண்மையான தங்கச் சங்கிலி மற்றும் தங்கக் காப்புகளைக் கழற்றிக்கொண்டு, போலியான நகையை மூதாட்டியின் கழுத்தில் அணிவித்துத் தப்பிச் சென்றுள்ளார்.
திருடப்பட்ட 110 கிராம் எடையுள்ள நகைகள், 1971 இல் பொற்கொல்லரான தனது மறைந்த கணவரால் செய்து தரப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான நினைவுகள் என பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணின் மகன் இராகவேந்திர குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, வெளியில் நடைபயிற்சி செய்வதையே நிறுத்தியுள்ளார்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் பயன்படுத்திய வெள்ளை நிற Chevrolet Equinox வாகனத்தை பீல் பிராந்திய பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். அதேபோல் டொரண்டோ பகுதியில் இதே பாணியில் நகைகளை மாற்றி ஏமாற்றிய ஆண்ட்ரியா இஸ்பாஸ் என்ற பெண் தேடப்பட்டு வரும் நிலையில், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





