பிரித்தானியாவிற்கு இலங்கை, இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் விசா பெற்றுக்கொடுத்து ஏமாற்றும் தமிழ் முகவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் பர்மிங்காம் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்மெத்விக் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஜெம்ராஜ் என்பவரே தேசிய குற்றத்தடுப்பு முகமை மற்றும் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் போலி விசாக்கள் மற்றும் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துவந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குடிவரவு அதிகாரிகளின் கண்காணிப்பின் போது இவரது சமூக ஊடகப் பதிவுகள் கண்டறியப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாகக் கொண்டுவரப்பட்ட Border Security, Asylum and Immigration Act 2025 சட்டப்பிரிவு 17-ன் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் 1999-ஆம் ஆண்டின் சட்டத்திற்கு மாறாக, சட்டவிரோதமாக குடிவரவு ஆலோசனைகளை வழங்கிய குற்றச்சாட்டையும் இவர் எதிர்கொள்கிறார். இவர் பர்மிங்காம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய குற்றத்தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.





