பத்தேகம, ஹல்பதொட்ட பகுதியில் இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த குடாவிதானகே சுசிதா இரோஷனி அல்லது ‘களு நோனா’ (47) என்பவரும், அவர் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியும் ஆவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடானது, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும், முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருமான சோபன ஹந்தி ஜெயலத் டி சில்வா அல்லது “கரந்தெனிய சுத்தா” என்பவரின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ‘களு நோனி’ என்பவர், லந்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா அல்லது ‘லொக்கு பெட்டி’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் தரப்பைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான இந்த ‘லொக்கு பெட்டி’ என்பவர் கடந்த மே மாதம் 04 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவராவார். கடந்த 2024 ஆம் ஆண்டு அத்துருகிரியவில் ‘கிளப் வசந்த’ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பத்தேகம, ஹல்பதொட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற அம்பலாங்கொட, குளிகொட பகுதியைச் சேர்ந்த லலித் சுசந்த டி சில்வா என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்காக காரொன்றில் நால்வர் வந்துள்ளதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்களில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்காக இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டதாகவும், அவற்றில் ஒரு துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர்கள் பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கார்களுக்கு மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த ‘களு நோனா’ என்பவரின் தாயாரான அம்பலாங்கொட, தொடஹேன, செஞ்சிலுவை வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்த டி. என். ஜி. மல்லிகா என்பவர் தற்போது காலி கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் பத்தேகமவில் அமைந்துள்ள காலி குற்றத்தடுப்புப் பிரிவில் கையொப்பமிடுவதற்காகச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் பயணித்த முச்சக்கர வறியை மறித்து, T-56 ரக துப்பாக்கியால் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்புக் கேமராவிலும் (CCTV) பதிவாகியிருந்தன.





