மட்டு.வெல்லாவெளியில் சோகம். மகப்பேற்று பரிசோதனை முடித்து விட்டு வீடு திரும்பிய குடும்பம் விபத்தில் சிக்கியதில் பெண்ணொருவர் பலி
வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் சோகம்- டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி பெண் உயிரிழப்பு.!கர்ப்பிணி தாய் உட்பட மூவர் படுகாயம்!
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பிரதான வீதியின் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணித் தாய் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று (16.09.2026) ஆம் திகதி
இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தவேளை, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் கடுமையாகக் காயமடைந்த 40 வயதுடைய சந்திரன் புவனசுந்தரி எனும் பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த கர்ப்பிணித் தாய் மற்றும் ஏனைய இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
விபத்தின் வீரியத்தால் முச்சக்கர வண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளது.
பொதுமக்களின் கவலை மற்றும் கோரிக்கை..!
இப்பிரதேசத்தில் கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக அதிவேகமாகச் செல்வதனால், வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, அசம்பாவிதங்கள் தொடர்வதைத் தடுக்க சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகள் உடனடியாகக் கவனமெடுத்து, கனரக வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களையும் வெல்லாவெளி பொலிஸார் தடுத்து வைத்துள்ளதோடு, இரு வாகனங்களின் சாரதிகளையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




