மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநர் விளக்கமறியலில்: இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பியோட உதவியவர்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முதன்மை சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது ‘பலசு’ என்ற சந்தேகநபரை கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குறிப்பிட்ட படகு ஓட்டுநர், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் 47வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நன்கு திட்டமிட்டு இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டு வெளியேற்ற ஏற்பாடு செய்துள்ளார் என்றும், அவரை இந்தியாவில் இறக்கிவிட்ட பிறகு படகின் முக்கிய சாட்சியமான ஜி.பி.எஸ் (GPS) கருவியை அழித்துள்ளார் என்றும் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறான முறையைப் பயன்படுத்தி இவர் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டுத் தப்பியோட உதவியுள்ளார் என்றும், இந்தியா செல்வதற்காக இவர் 50,000 ரூபாய் பணம் பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.





