தலவத்துகொட 800 மில்லியன் ரூபாய் கொள்ளை: சூத்திரதாரி முல்லேரியாவில் கைது!
தலவத்துகொட பகுதியிலுள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றில், முகமூடி அணிந்த நபர்கள் உள்நுழைந்து, ஊழியர்களை முழந்தாளிடச் செய்து, பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 800 மில்லியன் ரூபாய் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி மற்றும் வாகன ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முல்லேரியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபாய், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.இக்கொள்ளைச் சம்பவம் செப்டம்பர் 1ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது ஆயுதமேந்திய மூன்று நபர்கள் முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களைக் கொலை செய்வதாக மிரட்டி, அவர்களைத் தாக்கிவிட்டு, சுமார் 650 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான 30 பவுண் தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் அதே முகவர் நிலையத்தில் பிரதி பிரதிநிதியாகப் பணியாற்றியவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர் இந்த முகவர் நிலையத்தின் உரிமையாளரிடமிருந்து பெற்ற 15 மில்லியன் ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பெரும் கடன் சுமையில் இருந்துள்ளார்.சமீபத்தில் முல்லேரியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனக்கு ஏற்பட்ட பகிரங்க அவமானமும், கடன் சுமையுமே இக்கொள்ளையைத் திட்டமிடக் காரணம் என சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்குற்றத்தைத் தனியாகச் செய்ய முடியாததால், நவகமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் சிவில் ஊழியர் ஒருவரின் உதவியை அவர் நாடியுள்ளார். அவர் மூலமாக பொமிரியப் பகுதியைச் சேர்ந்த மேலும் இருவருடன் தொடர்பு கிடைத்துள்ளது.கொள்ளைச் சம்பவத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த குழுவினர் பிலியந்தல, சித்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தித்து இக்கொள்ளையைத் திட்டமிட்டுள்ளனர்.
குற்றத்தைச் செய்வதற்காக ஹன்வெல்ல நிதி நிறுவனமொன்றிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட வாகனத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.கொள்ளைச் சம்பவத்தின் பின்னர், இக்கும்பல் மீண்டும் சித்தமுல்ல வீட்டில் ஒன்று கூடி கொள்ளையடித்தப் பணத்தைப் பகிர்ந்துள்ளனர். இதன் போது சூத்திரதாரிக்கு 200 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ் ஊழியருக்கு 150 மில்லியன் ரூபாயும் தங்க நகைகளும் கிடைத்துள்ளதுடன், மற்ற இருவருக்கும் தலா 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தலைமைச் சூத்திரதாரி தனக்குக் கிடைத்தப் பங்கிலிருந்து, பொமிரியப் பகுதியிலுள்ள தனது நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பிற்காக 5 மில்லியன் ரூபாயைக் கொடுத்துள்ளதுடன், அடகு வைக்கப்பட்டிருந்த காணி ஒன்றினை மீட்பதற்காக 1.3 மில்லியன் ரூபாயைப் பயன்படுத்தியுள்ளார்.
அத்துடன் முல்லேரியா பகுதியிலுள்ள பல பெண்களிடம் பெற்றிருந்த கடன்களையும் அவர் செலுத்தியுள்ளார். பொலிஸார் தற்போது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 300,000 ரூபாயைத் தவிர ஏனைய அனைத்துப் பணத்தையும் மீட்டுள்ளனர்.ஏனைய சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.கைது செய்யப்பட்ட முதன்மைச் சந்தேக நபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.





