மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு – அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டம், கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாவ – ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (21) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தௌபீக் முகமட் தாரிக் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விவசாய இயந்திரத்தை கழுவுவதற்காக வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் கொம்ரசர் இயந்திரத்தை இணைத்திருந்த நிலையில், மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக கஹடகஸ்திகிலிய – ரத்மல்கஹவெவ கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன், மரணத்தில் சந்தேகம் இல்லை என உறவினர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

