கனடாவில் டொராண்டோவில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்கார்ப்ரோ பகுதியைச் சேர்ந்த 43 வயதான மனோகரன் சுப்பிரமணியம் என்ற ‘டோ டிராக்’ உரிமையாளர், கொள்ளை சதி திட்டம் தீட்டியதாகக் கூறி காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபருடன் 44 வயதான பிரையன் பெட்ரோல் மற்றும் 43 வயதான சுதன் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் மீது கொலை செய்ய சதி செய்தல் உள்ளிட்ட தீவிர குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி ஓகன் பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் மையத்தின் உரிமையாளர் ஃபர்காத் ஜோகி லாக்மி மற்றும் ஜெகான் சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கொலை செய்ய இந்த மூவரும் திட்டமிட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதில் குறிவைக்கப்பட்ட ஃபர்காத் ஜோகி லாக்மி ஏற்கனவே கடந்த ஆண்டு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலான ‘தி யூனியன்’ என்ற அமைப்பின் முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறார்.
இவர் ஏற்கனவே கொலை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டொராண்டோ பகுதியில் ‘டோ டிராக்’ தொழிலை கைப்பற்றுவதற்காக மனோகரன் சுப்பிரமணியம் தலைமையிலான தரப்பினருக்கும், டர்காம் பகுதியைச் சேர்ந்த ‘தி யூனியன்’ குழுவினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவிவருகின்றன.
கடந்த காலங்களில் இப்பகுதியில் நடந்த தீவைப்பு சம்பவங்கள், துப்பாக்கிச் சூடுகள் மற்றும் மிரட்டல்கள் ஆகியவற்றுடன் இந்த மோதல்களுக்கு நேரடி தொடர்பு உண்டு.
குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டில் மனோகரன் சுப்பிரமணியம் தனது பிங்கரிங் வீட்டு வாசலில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.





