புதினங்களின் சங்கமம்

யாழ் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெண் சட்டத்தரணிக்கு நடந்த கதி!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…..

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த வாரம் எரிபொருளை நிரப்புவதற்குச் சென்றோம். முச்சக்கரவண்டி, கார் நின்ற ஒரு வரிசையில் நாம் நின்ற போது, அதில் நிரப்ப முடியாது என ஊழியர் ஒருவர் மற்றைய பம்புக்கு வருமாறு அழைத்தார். ஒருவாறு வாகனத்தைத்திருப்பி அவர் குறிப்பிட்ட வரிசையில் நின்றோம். முன்னுக்கு வாகனத்தை எடுக்குமாறு கூறி, அருகில் வந்த ஊழியரிடம் QR இனைக்கொடுத்து 10 லீற்றரை நிரப்பச்சொன்ன போது அவர் உடனேயே பணத்தினை வாங்கியிருக்கலாம். ஆனால் தள்ளிச்சென்று பம்பில் 10 லீற்றரை பதிந்தார். எட்டிப்பார்த்த போது சரியாகத்தெரியவில்லை. சிறிய நேரத்தில் பணம் கேட்ட ஊழியரிடம், பணத்தைக்கொடுத்து மீதி வாங்கியதும் அவர் எரிபொருளை நிரப்பி விட்டார் என எண்ணி வாகனத்தை இயக்கிய போது, இன்னும் நிரப்பவில்லை என ஊழியர் சிடு சிடுத்தார். எட்டிப்பார்த்த போது எனக்கு பம்பில் உள்ள பதிவுகள் எதுவுமே தெரியவில்லை. உடனேயே, நிரப்பியாயிற்று முன்னுக்கு எடுங்கள் என்றார். நான்கு புள்ளிகள் ஏற வேண்டிய இடத்தில் ஒரு புள்ளி மட்டுமே ஏறி இருந்தது. ஊழியரிடம், ஏன் இவ்வாறு உள்ளது எனக்கேட்ட போது, வாகனத்திற்குள் யார் பின்னுக்கு இருக்கின்றார்கள் எனக்கேட்டபடி எட்டிப்பார்த்தார். பின் நீங்கள் கதைத்துக்கொண்டிருந்து விட்டு இப்ப வந்து கேள்வி கேட்கின்றீர்களா ? கெதியாக வாகனத்தை எடுங்கள் என்றார். நான் சொன்னேன் புள்ளி ஏறாமல் வாகனம் எடுக்க மாட்டேன். எனக்குப் பற்றுச்சீட்டு கொடுங்கள் என்று நான் கேட்ட போது, ஊழியர் உடனடியாக பற்றுச்சீட்டு இந்த இயந்திரத்தில் வராது. நான் இனி பெற்றோல் நிரப்ப மாட்டேன் என விரைந்து சென்று அலுவலகத்தில் அமர்ந்து கொண்டார்.

மக்கள் வரிசை அதிகரிக்கின்றது. ஒரு சிலர் வந்து என்னைப்பேசுகின்றார்கள். ஒருவர் வந்து எரிபொருள் நிலையத்தில் தொலைபேசி கதைக்ககூடாது என்று உங்களுக்குத்தெரியாதோ என்று கேட்டார். எனக்கு சிரிப்பு ஒருபக்கம் , கோபம் ஒரு பக்கம். உடனே வாகனத்தை விட்டு இறங்கி அலுவலகத்திற்குள் சென்றேன். குறிப்பிட்ட ஊழியர் சாவகாசமாக அமர்ந்திருக்க, முகாமையாளர் அமைதியாக இருந்தார். பற்றுச்சீட்டுத்தர முடியாது என்றால், பெற்றோல் நிரப்பினீர்களா இல்லையா என்று கேட்டேன் பதில் இல்லை. நான் திரும்பி வந்து எனது வாகனத்திற்கு அருகில் நின்றேன். மக்கள் வரிசை அதிகரித்தது. என் கூட வந்திருந்த தங்கையும், அவள் நண்பியும் அக்கா போவோம் வாருங்கள் என்றார்கள். அங்கு வரிசையில் நின்றவர்கள் என்னை பிரச்சினை பண்ணுகின்ற ஒருத்தியாக, ஒரு மாதிரிப்பார்த்தார்கள். கணவருக்கு தொலைபேசியில் ஏற்கனவே தகவல் கூறியதால் அவரும் அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

பணமோ, எரிபொருளோ போனால் கூட பரவாயில்லை ஆனால் தன்னுடைய பிழைக்கு என் மேல் பழி சுமத்தியது மட்டுமன்றி பெற்ற பணத்திற்குரிய பற்றுச்சீட்டினை வழங்க மறுத்து, பொறுப்பில்லாமல் மக்களை வரிசையில் காக்க வைத்து விட்டு, தன் பணியினைச்செய்யாமல் அமர்ந்திருக்கின்ற ஊழியரின் மெத்தனப்போக்கினையும் முகாமையாளரின் பொறுப்பற்ற செயலையும் எண்ணும் போது அங்கிருந்து செல்ல மனம் ஒப்பவில்லை. சடுதியாக அந்த நிரப்பு நிலையத்தை புகைப்படம் எடுத்தது மட்டுமன்றி அலுவலககத்திற்கு விரைந்து சென்ற போது ஊழியர் பார்த்தும் பார்க்காதது போல முகத்தைத்திருப்பியவர் நான் ஏதும் கதைக்காமல் நிற்பதை அறிந்து மீண்டும் என் பக்கம் திரும்பும் போது அவரைப்புகைப்படம் எடுத்து விட்டு நான் வாகனத்தை நோக்கி விரைந்தேன்.

அதன் பிறகு, உங்கள் வாகனத்தில் தான் பிழை, இப்போது ஏன் புகைப்படம் எடுத்தீர்கள்? அழியுங்கள் என ஓடி வந்த ஊழியரிடம் இவ்வளவு நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன் என்ற நீங்கள் இப்போது வாகனம் பிழை என்கின்றீர்கள். பரவாயில்லை, நான் செய்ய வேண்டியதை செய்கின்றேன் என வாகனத்தில் ஏற முற்பட்ட போது, அவர் வாகனத்தின் கதவிற்கு முன்னே நின்று கொண்டு கதவினைத்திறக்க விடாமல் புகைப்படத்தை அழியுங்கள் என்றார். எதுவும் கதைக்காமல் நின்றிருந்த முகாமையாளர் ஓடி வந்து தொலைபேசியில் வெறும் பம்பு வாசிப்பை காட்டி இதோ பாருங்கள் பெற்றோல் நிரப்பப்படுகின்றது என்றார். 10 லீற்றர் நிரப்பப்படுவது தெரிகின்றது சரி, அது என்னுடைய வாகனத்திற்கு தான் நிரப்பப்படுகின்றது என்பது இதில் தெரியவில்லையே என்றதும் பதில் இல்லை. இப்போது என்ன செய்ய வேண்டும் புகைப்படத்தை அழியுங்கள் 119 இற்கு அழைப்பேன் என்றார்.

நீங்கள் எரிபொருள் நிரப்பியது நிரப்பாதது அடுத்த பிரச்சினை. ஆனால் என்னை அவதூறாகக் கதைத்துப்பழி போட்டது தான் ஆத்திரமாக உள்ளது. உங்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கின்றேன் என்றேன். ஊழியரோ புகைப்படம் அழிக்காவிடில் தான் ஏதாவது செய்து விடுவேன் என முகாமையாளருக்கு கூற, முகாமையாளர் என்ன நடவடிக்கை என்றாலும் என் மீது எடுங்கள் எனக்கூற, வரிசையில் நின்ற மக்களின் முகங்களைப்பார்க்கப் பாவமாக இருந்தது. புகைப்படத்தை அழித்தேன். அழிக்கப்பட்ட பகுதியிலுள்ள படத்தினை அழிக்குமாறு, என்னுடைய தொலைபேசியினை அந்த ஊழியர் தொட முயன்றார். அவருக்கு நல்ல அர்ச்சனை கொடுத்தேன். யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கு தாம் பெரிய காவல்துறை அதிகாரிகள் என்ற நினைப்பு பலமாக உள்ளது.
அந்த ஊழியருக்கு எதிரான நடவடிக்கை என்னால் அங்கு எடுத்திருக்க முடியும். அங்கு நின்ற பொது மக்களின் பொன்னான நேரத்தினையும் என் நேரத்தினையும் வீணாக்க விருப்பின்றி அங்கிருந்து சென்றேன்.

இந்தப்பதிவு விழிப்புணர்வுக்கானது.

1) எரிபொருள் நிரப்பிய பின்னரே பணம் செலுத்தப்பட வேண்டும்.

2) பெறப்பட்ட பணத்திற்குரிய பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும்.
பற்றுச்சீட்டு வழங்க மறுப்பது CAA இன் கீழ் குற்றமாகும்.

3) எரிபொருள் வாசிப்பினை நுகர்வோருக்கு மறைத்து எரிபொருளை நிரப்புதல் கூடாது.

4) நுகர்வோரின் நுகர்வு சம்பந்தமான கேள்விகளுக்கு ஒழுங்கான பதிலை முகாமையாளரோ, ஊழியரோ வழங்க வேண்டும்.

5) மக்களை வரிசையில் காக்க வைத்து விட்டு பொறுப்பற்று ஊழியர்கள் செயற்படக்கூடாது.

6) பொறுப்பற்ற ஊழியர்களை, சேவையில் பிழை விடும் ஊழியர்களை பணி சார்ந்து புகைப்படமோ காணொளியோ பொதுமக்களால் எடுக்க முடியும். அதனை நீதிமன்றங்களில் பயன்படுத்த முடியும். ஆனால் அதனை பொது வெளியில் பகிர்வது குற்றமாகும்.

மேற்படி விடயங்கள் இடம்பெற்றால் நுகர்வோர் அதிகார சபைக்கு (CAA) அறிவிக்க முடியும்.

1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும்.

எரிபொருள் நிலைய ஊழியர்களைக்கேள்வி கேட்டால் எரிபொருள் கிடைக்காது என்ற மடத்தனத்தால் பிழையினைத்தட்டி கேட்காமல், தாம் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்திட்டு போகின்ற, பொது மக்களே, எரிபொருளுக்காக அந்த ஊழியர்களுக்கு வக்காலத்து வாங்கும் பெரிய மனிதர்களே, உங்களுக்கான எரிபொருளுக்குரிய பணம் உங்களால் செலுத்தப்படுகின்றது. உங்களுடைய பணத்தினால் தான் அவர்களுக்கு வருமானமேயன்றி நீங்கள் அவர்களிடம் நிவாரணம் பெறவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிழையைத்தட்டிக்கேட்டால் பெற்றோல் நிரப்ப மாட்டேன் எனப் பணி புரியாமல் சென்று அமரும் ஊழியர்களே, நீங்கள் நிரப்ப மாட்டேன் என அதிகாரம் செய்வதற்கும் திமிர் காட்டுவதற்கும், இது ஒன்றும் உங்கள் பாட்டன் வீட்டுக்கிணறு இல்லை.
ஒரு நேர்மையான முறைப்பாடு ஒரு நுகர்வோரால் செய்யப்பட்டால் அந்த ஊழியர்கள் எங்குமே பணியாற்ற முடியாது.

பற்றுச்சீட்டுப் பெற முடியாது எனத்தெரிந்தும் அந்தக்குறிப்பிட்ட இயந்திரத்திற்கு வலிந்து அழைத்து எரிபொருள் நிரப்புவதன் காரணம் என்ன என்று எனக்கு விளங்குகின்றது. ஊழலுக்கு எதிரான சட்டம் என்ன என்பதை விளங்கிக்கொண்டால் பற்றுச்சீட்டை வழங்காமல் விடுவீர்களா?

அனுமதியின்றி, ஒருவருடைய வாகனத்தை திறந்து பார்ப்பதற்கும், தொலைபேசியினைத்தொடுவதற்கும் காவல்துறைக்குக் கூட அதிகாரம் இல்லாத போது, எரிபொருள் நிரப்பும் ஊழியருக்கு இந்த அதிகாரத்தைக்கொடுத்தது நாட்டில் ஏற்பட்ட பெற்றோல் பற்றாக்குறையா? அல்லது யாழ் மக்கள் பெற்றோலுக்கு கொடுப்பதைப்போன்று, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு கொடுக்கின்ற அதீத முன்னுரிமையா?

கொழும்பில் இவ்வாறில்லை. யாழில் மட்டுமே கடவுளர்களாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் பார்க்கப்படுகின்றார்கள்.
காலக்கொடுமை..!

அதிருப்தியுடன்
Sevanthy Velauthapillai
©️

Call their hotline directly at 1977.
File a complaint via the Consumer Affairs Authority Contact Us page.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x