புதினங்களின் சங்கமம்

அரியாலையில் 26 மனித புதைகுழிகள் உள்ளன – கண்கண்ட சாட்சியங்களும் உயிருடன் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சித்திரவதை முகாம்களில் இருந்து உயிருடன் தப்பியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட சித்திரைவதைகள் தொடர்பிலும் ,மற்றையவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை கண்களால் கண்ட நேரடி சாட்சியங்களாக இன்றும் வாழ்கின்றார். அவர்கள் உள்நாட்டு பொறிமுறைகளை நம்பி சாட்சி சொல்வதற்கு தயார் இல்லை. சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் , சாட்சியம் அளிக்க தயாராக உள்ளனர் என செம்மணி மனித புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார்.

அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்ச கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, நேற்றைய தினம் உரிமைப் பந்தம் எனும் தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்கள் ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போது செம்மணி புதைகுழி காணப்படும், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் என்பது 80 வருடங்களுக்கு மேற்பட்ட சைவ மக்களுடைய பாரம்பரியமாக எரியூட்டுகின்ற சுடலையாகத்தான் இருந்து வந்திருக்கின்றது.

ஆனால் நீதிமன்றத்தினுடைய கட்டளையின் பேரிலும், அல்லது மிகச் சிறியவர்கள் இறக்கின்ற தருணத்தில் மட்டும்தான் எமது யாப்பிலும், பேச்சு வழக்கிலும் கூறிவந்த ஒரே ஒரு விடயம்.இப்போது தகனமேடை இருக்கின்ற பகுதிக்கு வடகிழக்காக இருக்கின்ற ஒரு சிறிய பகுதியில் மட்டும்தான் அவ்வாறான தகனங்கள் இடம்பெறும்.

வேறு எங்கும் புதைக்கின்ற செயல்பாடு 80 வருடமாக இடம்பெறவில்லை என்பது அரியாலையில் வாழ்கின்ற, பூர்வீகமாக வாழ்கின்ற எம்மூதாதையருக்கும் எமக்கும் தெரிந்த விடயம்.

ஆனால் 1995ம் ஆண்டு ஓக்டோபர் மாதத்திற்குப் பின்னர், இந்த இடத்தை இராணுவம் கைப்பற்றிய காலப்பகுதியிலிருந்து 2011ம் ஆண்டு வரை எம்முடைய கையில் இந்த சுடலையை ஒப்படைக்கும் வரை, முற்றுமுழுதாக இராணுவத்தினுடைய காவலரண்கள் நிறைந்த, இராணுவ சோதனைச் சாவடி நிறைந்த ராணுவ முகாமாகத்தான் இந்த அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் இருந்து வந்தது.

இந்த நிலைமையில்தான் 1996ம் ஆண்டு காலப்பகுதியிலே கிரிஷாந்தியினுடைய படுகொலையைத் தொடர்ந்து, இங்கே 1999ம் ஆண்டு ஆறு மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு 15 உடல்கள் எடுக்கப்பட்டன.

அது எடுக்கப்பட்ட பகுதிகள் இந்த சித்துப்பாத்தி இந்து மயான சுடலைப் பகுதி அல்ல. யாழ் . வளைவு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள பிள்ளையார் ஆலயத்தினுடைய ஒரு பகுதியிலும், அங்கே மருத மரத்தின் பின்னால் இருக்கின்ற ஒரு கேணியிலிருந்து இரண்டு உடல்களும், அதனைவிட இந்த உப்பளப் பாத்தியினுடைய பகுதியில் சில உடல்களும் மொத்தமாக ஆறு புதைகுழிகளில் இருந்தும் 15 உடல்கள் எடுக்கப்பட்டன.

எனவே, இந்த மனிதப் புதைகுழி என்பது தனியே இந்த சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக எவரும் நினைத்துவிட வேண்டாம்.

இந்த புதைகுழிகள், என்னைப் பொறுத்தவரையில் 2019 ம் ஆண்டு நீர்வழங்கல் சபையினால் நாயன்மார்கட்டுப் பகுதியிலே ஒரு தண்ணீர் தாங்கித் தொட்டி அமைக்கின்ற போது, சில மனித எச்சங்களை அடையாளப்படுத்தி அவற்றினை எடுத்து, நீதிவான் நீதிமன்றத்திற்கு அது வழக்காகக் கொண்டு செல்லப்பட்டு, இன்றுவரை அந்த வழக்கு இல்லை. அந்த இடம் கூட இந்த செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட விடயங்கள்.

மிகவும் தெளிவாகச் சொல்கின்றேன், கிருசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சோமரத்ன ராஜபக்ச இந்த பகுதியில்தான் தான் கடமையாற்றியதாக தனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அது உண்மையல்ல.இராணுவத்தினுடைய 7சி எல்ஏ இராணுவப் படையணி என்பது, 15 உறுப்பினர்களை அரியாலையில் கொண்ட ஒரு இரகசிய இராணுவ அணியாகச் செயல்பட்டது.

அவர்கள் கைதடி,, மணியந்தோட்டம், கொழும்புத்துறை, அரியாலை, புங்கங்குளம், நாயன்மார்கட்டு ஆகிய இடங்களுக்கு சென்று அனைவரையும் கைது செய்து, அவர்களை விசாரிக்கின்ற, சித்திரவதைப்படுத்துகின்ற செயல்பாட்டில் ஈடுபட்ட ஒரு இராணுவக் குழு.

இது தொடர்பான கண்ணால் கண்ட சாட்சிகளும், அந்த சித்திரவதைகளில் இருந்து தப்பிய உயிருள்ள சாட்சியங்களும் பலர் இருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக அரியாலை, இந்த செம்மணிப் பகுதியிலே ஒரு பாரிய மனிதப் புதைகுழி கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டப்பட்டு, அதற்கு முன்னால் ஒரு இளைஞன் அம்மணமாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுவதற்குத் தயாராக இருந்த நேரத்தில், கடவுளின் சித்தத்தால் தப்பி பூசாவுக்குள் கொண்டு செல்லப்பட்டு, இன்று விடுதலையாகி இந்த அரியாலை பகுதியில் வசித்து வருகின்றார்.

ஆனால் அவர்கள் இந்த இலங்கை கட்டமைப்பிற்குள் இருக்கின்ற நீதித்துறையை நம்பியோ, அல்லது இந்த விசாரணையை மேற்கொள்ளுகின்ற சி.ஐ.டி.யினரை நம்பியோ தன்னுடைய வாக்குமூலத்தைத் தரத் தயாராக இல்லை.

இங்கே சர்வதேசப் பிரதிநிதிகளுடைய மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டுமென சில தரப்பினர் கூறுகின்றார்கள்.

மிகவும் தெளிவாக எங்களுடைய கருத்தை நாங்கள் கூற விரும்புகின்றோம். 1999ம் ஆண்டு இங்கே நடைபெற்ற அகழ்வு என்பது சர்வதேச பிரதிநிதிகளின் மேற்பார்வையில்தான் இடம்பெற்றது.

ஆனால் இன்று, அந்த வழக்கு இடம்பெற்று 27 ஆண்டுகள் கடந்தும், அந்த செம்மணி மனிதப் புதைகுழியினுடைய வழக்கு கிடப்பில் போடப்பட்ட வழக்காக இருக்கின்றது.

அதிலும் மிகவும் குறிப்பாக, 15 உடல்களில் இரண்டு இளைஞர்கள் அரியாலை பொன்னம்பலம் சந்தியில் இருக்கின்ற ராணுவத்தினுடைய மூவ்மெண்ட் டிபார்ட்மென்ட்டினுடைய அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிற இராணுவ அதிகாரியினால் கைது செய்யப்பட்டு காணாமல் போன ராசையா சதீஷ்குமார், மகேந்திரம் பாபு ஆகிய இரு இளைஞர்களுடைய உடல்கள், யாழ். வளைவுக்கு அருகில் இருக்கின்ற பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருந்த சோதனைச் சாவடியில் இருந்துதான் கண்டெடுக்கப்பட்டு அது அடையாளம் காணப்பட்டது.

ஆனால், அந்த இரண்டு வழக்குகள் கூட இன்று கிடப்பில் போடப்பட்ட வழக்காகத்தான் இருக்கின்றது.

எனவேதான் நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறுகிறோம், இங்கே பல சித்திரவதை முகாம்கள் இருந்தன. அதில் மிகப் பிரதான முகமாக புங்கங்குளத்தில் இருந்த ராணுவத்தினுடைய மூன்று படைப்பிரிவுகளைக் கொண்ட இராணுவத்தினுடைய இரகசிய முகாம்கள் இருந்தன.

அதில் பிரதான முகாம் , தற்போது தேசிய மக்கள் சக்தியினரின் அலுவலகம் அமைந்துள்ள வீடு அந்த கால பகுதியில் சித்திரவதை முகமாக செயல்பட்டிருந்தது.

இதனைவிட கண்டி வீதியில், மாம்பழச் சந்தி, தபால் கட்டை சந்தி ஜெயா பில்டிங் சித்திரவதை முகாம், நெடுங்குளம் சந்தி ராணுவ சித்திரவதை முகாம், பொன்னம்பலம் சந்தியில் இருந்த ராணுவ சித்திரவதை முகாம் காணப்பட்டன.

கிருஷாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச உட்பட மூன்று அதிகாரிகள் 26 இடங்களில், மனிதப் புதைகுழி இருந்ததாக அடையாளப்படுத்தினார்கள். அதில் ஒரு இடம் பொன்னம்பலம் சந்தியில் இருக்கின்ற இடம்.

இதனைவிட, இந்த அரியாலை கொட்டுகிணற்றடி அதுக்கு அருகில், வயலின் நடுவில் இருக்கின்ற நிலப்பகுதி. அங்கே தான் இராணுவத்தினுடைய ‘சி’ சித்திரவதை முகாம் அமைந்திருந்தது.

யாழ் குடாநாட்டிலே கைது செய்யப்படுகின்ற அதிகமான இளைஞர், யுவதிகளை இந்த வெட்டவெளியில் கொண்டுவரப்பட்டு, இந்த ‘சி’ சித்திரவதை முகாமில் வைத்து சித்திரவதைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான சான்றுகள் அந்த இடத்தில் இன்றும் இருக்கின்றன; சாட்சியங்களும் இருக்கின்றன.

இவை எவற்றையும் அந்த மக்கள் இலங்கையினுடைய நீதித்துறைக்கு வழங்கத் தயாராக இல்லை. ஒரு பொதுவான சர்வதேசத்தினுடைய மேற்பார்வை மட்டுமல்ல, சர்வதேச விசாரணை நடக்குமாக இருந்தால் அதனை நாங்கள் கையளிக்கத் தயாராக இருக்கின்றோம்.

மணியந்தோட்டத்தில் மனிதப் புதைகுழி இருக்கின்றது; கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இருந்த ராணுவ முகாமில் மனிதப் புதைகுழி இருந்தது. அதனை 1999ம் ஆண்டுக்கு முன்னர் பல இடங்களில் அதனை அகற்றியிருக்கின்றார்கள்.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திலே கண்டறியப்படுகின்ற மனிதப் புதைகுழி உடல்களை முதல் முதல் புதைத்த இடம். ஆனால், ஏற்கனவே இருந்த மனித எச்சங்களை எடுத்து, அதை அகற்றி, அதை இல்லாதொழிக்கின்ற செயல்பாட்டைச் செய்த மனிதப் புதைகுழியும் இந்த அரியாலை மண்ணில் இருப்பதாகப் பலர் கூறுகின்றார்கள்.

காலம் நிச்சயமாக அவற்றை அடையாளப்படுத்தும்.
எனவே, இவற்றுக்கெல்லாம் ஒரு சர்வதேச விசாரணை வருமாக இருந்தால், அனைத்து சாட்சியங்களையும், அனைத்து சம்பவங்களையும் கொடுப்பதற்கு இந்த அரியாலை வாழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள் – என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x