புதினங்களின் சங்கமம்

இன்று அதிகாலை நிறை வெறியுடன் வந்தவர்களால் பொலிஸ் அதிகாரி கொலை! நடந்தது என்ன?

புத்தாண்டை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ஒருவரின் கார் மோதி இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அம்பலாந்தோட்டை – வளவை கங்கை பாலத்திற்கு அருகிலுள்ள வீதி சோதனை சாவடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பலாந்தோட்டை நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு ஆணையிட்ட போதும், நிறுத்தாமல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சூரியவெவ, வீரியகம பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் எம். சரத் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எம்பிலிப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், நாளை மறுதினம் (03) அம்பலாந்தோட்டையிலிருந்து புறப்படவிருந்தார்.

அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற கார் அம்பலாந்தோட்டை நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் இருவரும் அதிகளவில் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.