கண்ணா Vs செல்வி: கொழும்பு பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே விசம் கொடுத்து தமிழ் காவாலிகள் மோதல்!
ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தினுள் சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் பக்கெட்டை கொடுத்த நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அண்மையில் ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள், ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இவர்களின் நலம் விசாரிக்க வந்த நபர் ஒருவரால் விஷம் கலந்த பால் பக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நபர் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அங்குள்ள கடை ஒன்றுக்கும் சென்ற காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சேருநுவரவையைச் சேர்ந்த சமிந்து தர்ஷன (27) மற்றும் உளவு பார்த்ததாகக் கூறப்படும் கொழும்பு 13 ஐச் சேர்ந்த லக்ஷித பெர்னாண்டோ (29) ஆகியோர் விஷம் கலந்த பால் பக்கெட்டைக் குடித்ததால் சுகவீனமடைந்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி ஜிந்துபிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை புகுடு கண்ணாவின் கும்பல் மேற்கொண்டுள்ளதாகவும், குடு செல்வியின் மகன்கள் தலைமையிலான குழுவைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் புகுடு கண்ணனின் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களைக் கொலை செய்ய குடு செல்வியின் மகன்கள் தலைமையிலான கும்பல் விஷம் கலந்த பால் பக்கெட்டைக் கொடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அந்த வகையில் அடையாளம் காணப்பட்ட நபர் இந்த இரண்டு கும்பலையும் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்
அதன்படி, குடு செல்வி தரப்பு இந்த நபருக்கு பணம் கொடுத்து இந்த குற்றத்தை திட்டமிட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதி உத்தியோகத்தர் மற்றும் வாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

