கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்க்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அந்த கோபதாபங்களின் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை ஸஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். நானோ எனது குடும்பத்தினரோ பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை. நான் ஸஹ்ரானை பார்த்தது கூட இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார்,
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் குறிப்பிட்டார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
தெரிவுக்குழு :- இந்த குழு நியமிக்கப்பட்ட பின்னர் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் குழு சரியான காரணிகளை அறிக்கையிடவே உங்களிடமும் விசாரணை இடம்பெறுகின்றது. நீங்கள் சில காரணிகளை எம்மிடம் தெரிவித்துளீர்கள். ஆகவே அது குறித்த விசாரணையே இடம்பெறுகின்றது,
கேள்வி:- உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து தெரிவுக்குழு அமைத்து விசாரணைகளை நடத்துங்கள் என நீங்கள் கூறியது ஏன்?
பதில் :- தெரிவுக்குழு அமைக்க வேண்டும் என நன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். நான் மட்டும் அல்ல ஏனைய உறுப்பினர்கள் பலர் தெரிவுக்குழு வேண்டும் என்று கூறினார்கள். பயங்கரவாத செயற்பாடுகளுடன் என்னை தொடர்புபடுத்தி பாராதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் என்னைத் தொடர்புபடுத்தினர் . ஆகவே என்மீதான குற்றங்களை நான் நிராகரித்து அதனை நிருபிக்க வேண்டும். ஆகவே நானே தெரிவுக்குழு முன்னிலையில் வரவும் இணக்கம் தெரிவித்தேன்.
என்மீது குற்றம் சுமத்தி பொலிஸில் சிலர் முறைப்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் ஐ எஸ் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஸஹ்ரானை நான் வாழ்க்கையில் எப்போதும் பார்த்ததில்லை. இந்தத் தாக்குதல் இடம்பெற்று ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தின் மூலமாகவே ஸஹ்ரானை முதலில் பார்த்தேன். இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நானும் உள்ளேன்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் நானும் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து இது குறித்த வருத்தத்தை தெரிவித்தோம். இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் தண்டிக்க எம்மாலான சகல உதவிகளையும் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தேன். அன்றிலிருந்து இப்போது வரையில் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க வருகின்றேன..
அதுமட்டும் அல்ல எமது மதத் தலைவருடன் இணைந்து நாம் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் கருத்தொன்றை முன்வைத்தோம். இந்த பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட எவரதும் உடல்களை எமது மயானங்களில் அடக்கம் செய்ய அனுமத்திக்க மாட்டோம் என்றும் நாம் கூறினோம். இது எதிர்கால இளைஞர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினோம். இந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் என்ற பெயரை வைத்துக்கொண்டு பயங்கரவாதத்தில் ஈடுபடலாம். ஆனால் இவர்கள் எவரும் முஸ்லிம்கள் அல்ல. தற்கொலை தாக்குதல் நடத்தவோ ஏனைய இனத்தவரை கொலை செய்யவோ இஸ்லாம் கூறவில்லை.





