இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழு விபரம்!

முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பில் அயோத்தியில் இராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பை அறிவித்தார். இந்நிலையில இந்த தீர்ப்பின் முழு விபரம் வருமாறு,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி உள்ளது.

ஆனால் அந்த மசூதி இருந்த பகுதியில் தான் இராமர் பிறந்தார் என்று இராமஜென்ம பூமி இயக்கத்தினரும், விஷ்வ இந்து பரிசத் அமைப்பினரும் கூறி வருகிறார்கள். இதையடுத்து அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சுமார் 70 ஆண்டுகளாக சர்ச்சை நீடித்து வந்தது.

குறிப்பாக அயோத்தியில் இராம ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்துள்ள பகுதியில் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பதில்தான் சர்ச்சை ஏற்பட்டது. அந்த நிலத்துக்கு உரிமை கொண்டாடி நிர்மோகி அஹாரா, சன்னி வக்பு வாரியம், ராம்லல்லா ஆகிய 3 அமைப்புக்களும் அலகாபாத் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த நிலையில் கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த வழக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகளும் சரி சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அந்த தீர்ப்பை எந்த அமைப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றில் 14 மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளாக அந்த வழக்கு உச்ச நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது.

Image may contain: outdoor

இதற்கிடையே சர்ச்சையை சுமூகமாக தீர்த்து கொள்ள இந்து அமைப்புகளுக்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர், பிரபல வக்கீல் பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அந்த சமரச பேச்சுவார்த்தையை நடத்தியது.

ஆனால் அந்த சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து தினசரி விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

அதன்படி கடந்த ஓகஸ்ற் மாதம் 6ஆம் திகதி அயோத்தி வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. 40 நாட்கள் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மாதம் 16ஆம் திகதி அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்றன.

Image may contain: 1 person, standing and outdoor

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கொண்டாடிய அமைப்புகளின் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் அடிப்படையாக வைத்து நீதிபதிகளான ரஞ்சன் கோகாய், பாப்டே, சந்திரசூட், அசோக் பூசன், அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளும் தீர்ப்பு எழுதினார்கள்.

அந்த தீர்ப்பு விபரங்களை உச்ச நீதிமன்றம் இன்று 10.30 மணிக்கு வெளியிட்டது. தீர்ப்பை கேட்பதற்காக மூத்த சட்டத்தரணிகள் பராசரன், வைத்தியநாதன், ராஜுவ் தவான், மத்திய அரசு சட்டத்தரணி தஸ்கர் மேத்தா உட்பட ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அவர் கூறியதாவது,

நாங்கள் 5 நீதிபதிகளும் ஒருமித்த ஒரே தீர்ப்பை வழங்க இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது. அயோத்தி விவகாரத்தில் நாங்கள் எடுத்துள்ள முடிவு ஏகோபித்த ஒருமனதான முடிவாகும்.

Image may contain: one or more people, people standing and outdoor

அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். எனவே சன்னி அமைப்புக்கு எதிராக ஷியா அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இந்த தீர்ப்பை வாசித்து முடிக்க சுமார் 30 நிமிடம் ஆகலாம். ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மத நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. அமைதியை காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மதச் சார்பின்மையே அரசியல் சட்டத்தின் அடிப்படை பண்பாகும். எனவே நடுநிலையை காக்கும் பொறுப்பில் நீதிமன்றம் உள்ளது. அதற்கேற்ப தீர்ப்பு வழங்கப்படும்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் நிர்மோகி அஹாரா என்ற அமைப்பு ஆதாரங்களை காட்டவில்லை. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை.

அந்த அமைப்பு வழிபாடு செய்வதற்கான எந்த அதிகாரத்தையும் பெற்றதாக தெரியவில்லை. ஆனால் இந்துக்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறது. என்றாலும் அந்த அமைப்பு வழிபாடு தொடர்பாக உறுதியான தகவலை தரவில்லை.

மதங்களுக்குள் இருக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் மதிக்கிறது. அயோத்தியில் இராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதே நேரத்தில் அந்த இடத்தை முஸ்லிம்கள் பாபர் மசூதி என்று அழைக்கிறார்கள். ஆனால் ஒரு இடத்தின் உரிமையை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்ய முடியாது.

1857ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு எந்த தடையும் இருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது இடம்தான் என்பதை இஸ்லாமிய அமைப்புக்களால் நிரூபிக்க இயலவில்லை.

Image may contain: one or more people, crowd and outdoor

1992ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயலாகும். அதை ஒருபோதும் ஏற்க இயலாது. இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றில் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் உச்ச நீதிமன்றுக்கு ஏற்புடையது அல்ல.

சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது தவறாகும். 3 அமைப்புகளும் முழுமையான ஆவணங்களைத் தரவில்லை.

சர்ச்சைக்குரிய நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய நிர்மோகி அஹாரா அமைப்பு தேவையான ஆவணங்களை தரவில்லை. எனவே அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதற்கு பதில் ராம்லல்லா அமைப்பின் மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இஸ்லாமிய அமைப்புகளில் ஷியா அமைப்பின் கோரிக்கையை ஏற்க இயலாது. அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சன்னி வக்பு வாரியத்தின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் மத்திய அரசுக்கு உரிமை உடையதாகும். அந்த நிலத்தின் உரிமையும், பராமரிப்பு உரிமையும் மத்திய அரசு வசமே இருக்கும்.

இராமர் கோயில்

அந்த இடத்தில் இராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. மத்திய அரசு அதற்கு ஒரு அறக்கட்டளை உருவாக்க வேண்டும். அந்த அறக்கட்டளை இராம ஜென்ம பூமி அமைப்பின் மூலம் செயற்படுத்தப்பட வேண்டும். இராமர் கோயில் கட்டுவதற்கான நிலத்தை இராம்லல்லா அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த நிர்வாக அமைப்பில் நிர்மோகி அஹாரா அமைப்புக்கும் ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்கி சேர்த்துக் கொள்ளலாம்.

முஸ்லிம்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். சன்னி வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கரில் அந்த மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவுகளை மத்திய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் செயற்படுத்த வேண்டும். 3 மாதங்கள் இதற்காக இரு அரசுகளுக்கும் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் மத்திய அரசு சர்ச்சைக்குரிய இடத்தை சரி செய்து வழங்க வேண்டும்.

அயோத்தி நிலம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசும், உத்தரக் பிரதேச மாநில அரசும் ஒருங்கிணைந்து அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும்.

என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.