ஹட்டன் நகரில் அமைந்துள்ள ஒரே மூன்று மாடி வர்த்தகக் கட்டடத்திலுள்ள கடைகளை இலக்கு வைத்து இரண்டாவது முறையாகவும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், அந்நகர வர்த்தகர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதே கட்டடத்தில் முன்னர் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் நகரின் பின்புற வீதியில் அமைந்துள்ள குறித்த கட்டடத்திலுள்ள நான்கு கடைகள் ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை உடைக்கப்பட்டுக் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து சேலைகளை ஒன்றோடொன்று கட்டி, அவற்றின் உதவியுடன் கீழே இறங்கி வந்து சந்தேகநபர் இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் கடை உடைக்கப்பட்டுக் கொள்ளையிடப்பட்டிருந்தது. அச்சம்பவத்தின்போது கொள்ளையில் ஈடுபட்ட நபரின் முகம் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த ‘சி.சி.ரி.வி.’ (CCTV) கண்காணிப்புக் கமரா கட்டமைப்பில் தெளிவாகப் பதிவாகியிருந்த போதிலும், அச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின்போது, சந்தேகநபர் கண்காணிப்புக் கமரா ஒன்றின் திசையையும் மாற்றியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நகரைச் சூழவுள்ள பகுதிகளில் அவ்வப்போது இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், ஒரே வர்த்தகக் கட்டடம் மீண்டும் மீண்டும் இலக்கு வைக்கப்படுவதும், முந்தைய சம்பவத்தின் சந்தேகநபர் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படாமையும் வர்த்தகர்கள் மத்தியில் விசனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.













