லா கூர்நெவ் பகுதியில் 51 வயதுடைய மகேந்திரதேவி எம். (Mahendradevi M.) என்ற பெண் கொலை: மூவர் அதிரடிக் கைது!
பாரிசின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனி (Seine-Saint-Denis) பிராந்தியத்திற்குட்பட்ட லா கூர்நெவ் (La Courneuve) பகுதியில் உள்ள வாகனத் திருத்தகமொன்றில் (garage automobile) பெண்ணொருவரின் சடலம் வாகனத்தின் பின்பகுதியில் (coffre) இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கடந்த நவம்பர் 9-ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 51 வயதுடைய மகேந்திரதேவி எம். (Mahendradevi M.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வல்-துவாஸ் (Val-d’Oise) பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தத் தாயைத் தேடும் பணியில் காவற்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது, அவரது தொலைபேசியின் புவியிடங்காட்டி (géolocalisation) சமிக்ஞைகள் லா கோர்னவ், மொரிஸ்-பெர்தோ வீதியில் (rue Maurice-Berteaux) அமைந்துள்ள குறித்த வாகனத் திருத்தகத்திலேயே இறுதியாகப் பதிவாகியிருந்தமை தெரியவந்தது. இதேவேளை, நேற்றிரவு (நவம்பர் 14, சனிக்கிழமை) 10 மணியளவில், வாகனத் திருத்தக உரிமையாளரான தனது கணவர் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக அவரது மனைவியும் காவற்துறையினருக்கு அவசரத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்புப் பிரிவுப் படையினர் (BAC – brigade anticriminalité), அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிற்றுந்து (camionnette) ஒன்றின் பின்பகுதியில் மகேந்திரதேவியின் சடலத்தைக் கண்டுபிடித்தனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, திருத்தக உரிமையாளருக்கும் வாடிக்கையாளரான குறித்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதமே இந்த விபரீதத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. வாக்குவாதத்தின் போது திருத்தக உரிமையாளர் அப்பெண்ணைக் கீழே தள்ளியதில், அவரது தலை உலோகப் பகுதியொன்றில் (pièce métallique) பலமாக மோதியதாலேயே அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் குற்றத்தை மறைப்பதற்காகச் சடலத்தை வாகனத்தில் மறைத்து வைத்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பில் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூவர் காவற்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் (garde à vue) வைக்கப்பட்டுள்ளனர்.
கொலையைச் செய்த குற்றச்சாட்டில் திருத்தக உரிமையாளர் (garagiste).
குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக (complicité) காவற்துறைக்குத் தகவல் வழங்கிய அவரது மனைவி.
சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் உரிமையாளரான மூன்றாம் நபர்.
‘கடுமையான திட்டமிட்ட கொலை’ (homicide volontaire aggravé) என்ற அடிப்படையில் செய்ன்-சென்-டெனி குற்றவியல் காவற்துறையினர் (police judiciaire) தமது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்..





