பொலிஸ் காவலில் உயிரிழந்த ஹோமாகம இளைஞரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட பௌத்த பிக்கு ஒருவர், இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ‘ஒன்றிணைந்த நாடு’ (A Nation United Programme) நிகழ்வில் கலந்துகொண்டபோது, பொலிஸ் நிலைய அதிகாரிகளின் தவறான நடத்தைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரி குறித்தும் முறைப்பாடு செய்ததாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார்.
உயிரிழந்த இளைஞரின் மற்றொரு நண்பரும் இதேபோன்ற சூழ்நிலையில் தாக்கப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும் பிக்கு குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஹோமாகம பொலிஸில் பணியாற்றும் ‘குருசிங்கே’ என்ற அதிகாரியால் பல்வேறு சம்பவங்களில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் தாக்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய தாக்குதல்களால் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் பொதுமக்களைத் தாக்குவதற்காக நியமிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பொலிஸ் காவலில் இடம்பெறும் உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறியமைக்காக பொலிஸ் திணைக்களத்தையும் அரசாங்கத்தையும் விமர்சித்தார்.
உயிரிழந்த இஷார ஹர்ஷ குமார இவ்வாறான சூழ்நிலையில் உயிரிழந்த முதல் நபரும் அல்ல, கடைசி நபரும் அல்ல எனக் குறிப்பிட்ட பிக்கு, வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது பதுளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வராமல் இருந்திருந்தால், இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். உயிரிழப்பு திடீர் நோய் காரணமாக ஏற்பட்டதாகக் கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்தையும் விமர்சித்தார்.
சில பொலிஸ் அதிகாரிகள் சிறிய இலஞ்சத் தொகைகளுக்காகத் தங்களது நேர்மையை விற்றுவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“ஒரு போத்தல் சாராயத்திற்காகவும் 1,000 அல்லது 2,000 ரூபாவிற்காகவும் தங்களை விற்றுக்கொள்ளும் பொலிஸ் படை எம்மிடம் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய பிக்கு, பொலிஸாரின் தவறான நடத்தைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதால் தனக்கும் எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற கவலை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இறுதியாக, இஷாரவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பொலிஸ் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





