ஹொரான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆசிரியராகப் பணிபுரியும் தந்தையை, அவரது 27 வயது மூத்த மகன் கத்தியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின்படி, தந்தை குடிபோதையில் வீட்டிற்குத் திரும்பி வந்து தனது 19 வயது மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டால் தாக்கியதில் இளைய மகன் தலையில் காயத்துடன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான்.
இதனால் ஆத்திரமடைந்த 27 வயது மூத்த மகன், ஒரு கத்தியை எடுத்துத் தன் தந்தையைத் தாக்கியுள்ளதுடன் இதன் போது இருவருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கைகலப்பின் போது, மூத்த மகனுக்கும் தலையில் காயங்கள் ஏற்பட்டன.
இந்தக் கத்தித் தாக்குதலில் தந்தையின் தலை, கை மற்றும் அவரது உடலின் ஆறுக்கும் மேற்பட்ட மற்ற பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
படுகாயமடைந்த அந்த ஆசிரியரின் தலை மற்றும் கையில் சுமார் 46 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, 27 மற்றும் 19 வயதுடைய இரண்டு மகன்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.




