Home புதினங்களின் சங்கமம் சீ.வீ.கே சிவஞானம் மீது துப்பாக்கிச் சூடு! மயிரிழையில் உயிர்தப்பினார்!

சீ.வீ.கே சிவஞானம் மீது துப்பாக்கிச் சூடு! மயிரிழையில் உயிர்தப்பினார்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஆணையாளர் சிவஞானம் தெய்வாதீனமாகத் தப்பினார்

*இதே நாளில் 1988ம் ஆண்டு அன்று நடந்த சம்பவம்.
————————————————————————–

யாழ்ப்பாணம் – அக் 04
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் திரு. சி.வி.கே. சிவஞானம் நேற்று (03/10/88 )தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

மாநகரசபை அலுவலக அறைக்குள் புகுந்த துப்பாக்கி இளைஞர் ஒருவர் அவரை நோக்கி சுட்ட போதிலும், துப்பாக்கிக் குண்டுக் காயம் எதுவும் இன்றி அவர் மயிரிழையில் தப்பினார். கீழே விழுந்ததினால் உராய்வுக் காயம் மட்டுமே ஏற்பட்டதாக அறிய வந்தது.

நேற்றுக் காலை சுமார் 11 மணி அளவில் அலுவலகத்துக்கு வந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் ஆணையாளரைச் சந்திக்கப் போவதாக அலுவலகத்துக்கு வெளியே நின்ற சிற்றூழியர் ஒருவரிடம் அனுமதி கோரினார். அவருடன் வந்த மற்றும் இருவர் வெளியே நின்றனர்.

அனுமதி கோரிய இளைஞர் ஆணையாளரின் அறைக்குள் சென்றார். அவர் நுழைந்த சில நிமிடங்களில் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டன. “நீர் தானோ சிவஞானம்?” என்று கேட்டு அவர் சுட்டதாகவும் அறிய வந்தது.

துப்பாக்கி வேட்டுக்களை அடுத்து ஆணையாளர் மேசையின் கீழ் குனிந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிக்கொண்டார்.

மாநகர ஆணையாளர் சுடப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த அமைதிப் படையினர் ஆணையாளரின்
அறையைச் சோதனையிட்டனர். அப்பொழுது அங்கிருந்து மூன்று வெற்றுத் தோட்டாக்களை படையினர் மீட்டெடுத்ததாக அறியப்படுகிறது.

ஆணையாளரின் அறைக்குள் ஐந்து துப்பாக்கிச் சூட்டு அடையாளங்கள் காணப்பட்டன. மூன்று குண்டுகள் சுவரிலும் இரண்டு குண்டுகள் அவரது மேசையிலும் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மாநகரசபை ஊழியர்கள் ஒரு சிலர் அமைதிப் படையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனிடையே ஆணையாளரின் வீட்டிலும் இந்தியப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநடப்பு

ஆணையாளர் சுடப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாநகர ஊழியர்கள் அனைவரும் நேற்று 2.30 மணியில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இதேவேளை 24 மணி நேரத்துக்குள் ஆணையாளர் சுடப்பட்டதற்கான காரணம் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும், சுட்டவர்கள் தம்மை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் இல்லையேல் மின்சாரம், நீர் விநியோகம் ஆகிய அத்தியாவசிய சேவைகளைச் செய்யாமல் இருப்பது குறித்து ஊழியர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

04/10/1988 உதயனில் வந்த செய்தி அது.

அந்தத் துப்பாக்கி நபர் இனந்தெரியாதவர்களால் பின்னர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதாக அறியப்பட்டது.

*CVK :AI-generated image – 1988

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments