வீடுகளை உடைத்துச் செல்வது உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் கண்காணிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் தனமல்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரிய பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து, அங்கு வசித்துவந்த பெண்ணொருவரின் கைப்பேசியை சந்தேக நபர் திருடியுள்ளார்.
அத்துடன், குறித்த கைப்பேசியைப் பயன்படுத்தி அப்பெண் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை விடியோவாகப் பதிவுசெய்து, அந்தத் தொலைபேசியில் உள்ள எண்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்த 25,000 ரூபா பணத்தையும் சந்தேக நபர் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இது குறித்து வெலிக்கடை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அதன் விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.




