Home புதினங்களின் சங்கமம் போதை பாவித்து டிப்பர் செலுத்திய சாரதியால் கிளிநொச்சியில் இளம் தாய்க்கு ஏற்பட்ட பேரவலம் : இதற்கு...

போதை பாவித்து டிப்பர் செலுத்திய சாரதியால் கிளிநொச்சியில் இளம் தாய்க்கு ஏற்பட்ட பேரவலம் : இதற்கு யார் பொறுப்புக் கூறுவது?

கடந்த 29.08.2026 அன்று கிளிநொச்சி டிப்போச் சந்தியில் உந்துருளி மீது டிப்பர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாயின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. கையும் முறிந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறித்த சாரதி போதைப் பொருள் பாவித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.

போதை எனும் அரக்கன் ஒரு அப்பாவிப் பெண்ணினதும், அவளது பிள்ளைகளினதும் வாழ்க்கையை எவ்வாறு ஒரே நொடியில் சிதைத்துவிடுகிறது என்பதற்கு இது சான்றாக நிற்கிறது.தன் மூன்று பிள்ளைகளின் பசி தீர்க்கவும், அவர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் ஓடி ஓடி உழைத்த அந்தத் தாயின் ஒரு கால் முழங்காலுக்கு மேலாக அகற்றப்பட்டு, கையொன்றும் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் முடங்கிக் கிடப்பது காண்போரின் நெஞ்சைப் பிளக்கிறது.

“அம்மா” என்று ஓடிவந்து கட்டித் தழுவும் தன் குழந்தைகளை அள்ளி அரவணைக்க முடியாமலும், அவர்களின் தேவைகளுக்காகத் தன் சொந்தக் கால்களில் நிற்கமுடியாமலும் அத்தாய் சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரும் இனிவரும் காலங்களில் அக் குடும்பம் எதிர்நோக்கவிருக்கும் சொல்லொணாத் துன்பத்தையும் வாழ்க்கைப் போராட்டத்தையுமே உணர்த்துகிறது. தங்களின் தற்காலிகச் சுகத்துக்காகவும், மயக்கத்திற்காகவும் போதைப் பொருட்களைப் பாவித்துவிட்டு வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் பொறுப்பற்ற சாரதிகளின் இச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மது மற்றும் போதை மயக்கத்தில் வாகனத்தை இயக்குவது என்பது வெறும் கவனயீனமான விபத்து அல்ல. அது வீதியில் பயணிக்கும் அப்பாவி மனிதர்களின் உயிரையும் குடும்பங்களையும் இலக்கு வைத்துச் செய்யப்படும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

ஒரு சாரதியின் சில நிமிடப் போதை மயக்கம், உழைத்து வாழும் ஒரு தாயின் உடலைச் சிதைத்து முழுக் குடும்பத்தையுமே நிர்க்கதி ஆக்கியுள்ளது.

இத்தகைய போதைப் பழக்கத்தையும், போதையில் வாகனம் செலுத்தும் கொடூரப் போக்கையும் சட்டம் கடுமையான தண்டனைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். தண்டணையே தீர்வைத் தருகிறது. விழிப்புணர்வு, தெளிவுபடுத்தல்கள் எல்லாம் அதற்கடுத்த கட்ட நடவடிக்கையே.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments