டுபாயிலிருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுவின் முக்கிய குற்றவாளியான ‘பஸ் லலித்’ என அறியப்படும் லலித் கண்ணங்காரவிடம் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹன்வெல்ல – தித்தெனிய பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி (Pistol) ஒன்று மற்றும் ரிப்பீட்டர் ஷொட்கன் (Repeater Shotgun) ரக துப்பாக்கி ஒன்று ஆகியவற்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (07) மீட்டுள்ளனர்.
குறித்த ஆயுதங்கள் பஸ் லலித் மற்றும் அவரது கூட்டாளிகளால் மனிதப் படுகொலைகள் மற்றும் கப்பம் கோரி அச்சுறுத்தும் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஹன்வெல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் இந்த ஆயுதங்களுக்கு தொடர்புள்ளதா என்பதை கண்டறிய, அவை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பஸ் லலித்தின் நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கு அமைய, ஹன்வெல்ல சூழலில் இதுவரை 06 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்த 21 தொழிலதிபர்களிடம் அவர் பலவந்தமாக கப்பம் பறித்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.
டுபாயில் தலைமறைவாக இருந்தவாறே இக்குற்றச் செயல்களை அவர் ஒருங்கிணைத்து வழிநடத்தியுள்ளார். இவருக்கு உள்நாட்டில் உதவியாளராகச் செயற்பட்ட அடியாட்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் முன்னெடுத்து வருகின்றது.





