இலங்கையில் உள்ள கனேடிய தூதரகத்திற்கு நியாயம் கேட்கச் சென்ற தமிழ் யுவதிக்கு கொலை மிரட்டல்! அவதானம் மக்களே!
இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்திற்குச் சென்று நியாயம் கேட்ட ஈழத்தமிழ் பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இளைஞர், யுவதிகளை கனடாவிற்கு அனுப்புவதாக ஏமாற்றிய கும்பல் ஒன்றின் மூலம் துபாயிலிருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி அங்கு குடியேறுவதாகக் கூறி, போலியான ஆவணங்களை வழங்கி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி தமிழ் இளைஞர், யுவதிகளை அதிகம் இந்த மோசடியில் சிக்க வைக்க, முக்கிய திட்டங்கள் துபாயில் உள்ள நபர் ஒருவரால் செயல்படுத்தப்படுகின்றன.
தன்னுடன் தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்புகொண்ட பெண் ஒருவருக்கு கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கும் முறை குறித்து பிரதான மோசடியாளர் வெளிப்படுத்தியிருந்தார்.
விசாவிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் உள்ள மேலும் இரண்டு முகவர்களுடன் பெண்ணுக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். கனடா செல்வதற்கான மொத்த தொகை 45 லட்சம் ரூபாய் வரையிலில் செலவாகும் என்று கொழும்பில் உள்ள முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய கனடா வேலைவாய்ப்பை எதிர்பார்த்த இளைஞர், யுவதிகளை கொழும்புக்கு வரவழைத்து, கைவிரல் ரேகைகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதனிடையே கைவிரல் ரேகைகளுக்காகவும், விசா மற்றும் விமான பயணச்சீட்டுகளுக்காகவும் இந்த மோசடியுடன் தொடர்புடைய இருவரும் இளைஞர்களிடம் சுமார் 50 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் கனடா வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர்களிடம் பணம் பெற்ற மோசடி நபர்கள், பின்னர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமல் இளைஞர்களைத் தவிர்த்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த வேலைவாய்ப்பு விசாக்கள் குறித்து சந்தேகம் கொண்ட இளைஞர்கள், இங்கிருக்கும் கனடா தூதரகத்திற்கு இந்த விசாக்களைக் கொண்டு சென்று விசாரித்தபோது, அவை போலியாக தயாரிக்கப்பட்ட விசாக்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக குரல் பதிவு ஒன்றை அனுப்பி, துபாயில் உள்ள பிரதான மோசடிக்காரர் மிரட்டல் விடுத்திருந்தார்.
“நீ தெரிந்துகொள், நீ இருக்கும் இடம் எனக்குத் தெரியும். அதிகமாக துடிக்க வேண்டாம். நாங்கள் யார் என்று உனக்குத் தெரியாது. உன்னை விட பலரை நான் பார்த்திருக்கிறேன். உன்னை விட பலரிடம் பணத்தைப் பெற்றுள்ளேன். அதிகமாக துடிக்க வேண்டாம், அவ்வளவுதான்” என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளமையுடன், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

