பெற்ற பிள்ளைகளையே கண்மூடித்தனமாக தாக்கிய தாய் ஒருவரை கைது!
பெற்ற பிள்ளைகளையே கண்மூடித்தனமாக தாக்கிய தாய் ஒருவரை கைது செய்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
37 வயதுடைய எல்டப் டைனாவத்தை பகுதியைச் சேர்ந்த 4 பெண் பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்டப் டைனாவத்தை பகுதியில் நான்கு பெண் பிள்ளைகளின் தாய் ஒருவர் தொடர்ந்தும் தான் பெற்ற பெண் பிள்ளைகள் நால்வரையும் கண்மூடித்தனமாக கைகளினாலும் , கற்களினாலும் தாக்குவதாக கூறி குறித்த நான்கு பெண் பிள்ளைகளும் நேற்றைய தினம் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது விடயங்களை சிறுவர்களிடம் கேட்டு அறிந்து கொண்ட பசறை பொலிஸார் எல்டப் டைனாவத்தை பிரிவு மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதால் சம்பவம் தொடர்பில் மடூல்சீமை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து உடன் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற மடூல்சீமை பொலிஸார் குறித்த நான்கு பெண் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் குறித்த பிள்ளைகளின் தாயையும் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் குறித்த பிள்ளைகளின் தகப்பன் கொழும்பில் பணிபுரிவதாகவும் குறித்த பெண் பிள்ளைகளை அவர்களது தாய் கண்மூடிதனமாக கற்களினாலும் , கம்பிலும் தாக்குவதாகவும் சிறுவர்களிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் 15, 11,09,04 வயதுடைய நான்கு பெண் பிள்ளைகள் தற்போது மடூல்சீமை மெட்டிக்காத்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் குறித்த நான்கு பெண் பிள்ளைகளும் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் கைது செய்யப்பட்ட தாய் இன்றைய தினம் பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

