‘வெட்டாத கிணறு’ பாணியில் நடக்காத வேலைக்கு ரூ. 2.8 லட்சம் நிதி : புளியம்பொக்கனை கமநல சேவை திணைக்களத்தில் பகிரங்க மோசடி!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
திரைப்படங்களில் நாம் பார்த்துச் சிரித்த ‘வடிவேலுவின் கிணற்றைக் காணோம்’ நகைச்சுவைக் காட்சிகள் நிஜ வாழ்க்கையிலும், அதுவும் அரசுத் துறைகளில் அரங்கேறும்போது அதன் சுவையே தனி தான். கிளிநொச்சி, புளியம்பொக்கனை கமநல சேவைகள் திணைக்களத்தில் அப்படியொரு சுவாரசியமான உண்மைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புளியம்பொக்கனை கமநல சேவைகள் திணைக்களத்தின் முன்பக்கம் சிறிய அபிவிருத்திப் பணி ஒன்றை மேற்கொள்வதற்காகத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டு நிதியும் கிடைத்துள்ளது. குறித்த அபிவிருத்திப் பணிகளை அந்தத் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற ஒரு உத்தியோகத்தர் பொறுப்பேற்றுள்ளார்.
அவர் அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாகவே, ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து சுமார் 2,80,000 ரூபாயை உழவனூர் கறுக்காய்குளம் கமக்கார அமைப்பின் கணக்கில் வைப்புச் செய்துள்ளார். தங்கள் வங்கி கணக்கிற்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் திடீரென நிதி வந்தடைந்தது குறித்து, ‘இது யார் போட்டது, எதற்காக வந்தது’ என மண்டையை உடைத்துக் கொண்டு கமக்கார அமைப்பினர் குழம்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் அந்தக் குழப்பத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி முற்றுப்புள்ளி வைத்தார்.
தங்கள் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள வீதியில் சிறிய அழகுபடுத்தல் அபிவிருத்தி வேலை செய்த பணமே அதுவென்றும், அதனை வங்கியிலிருந்து எடுத்துத் தருமாறும் அவர் கோரியுள்ளார்.
ஆனால் கமக்கார அமைப்பில் இருந்த ஒரு சிலர் அதற்குச் சம்மதிக்கவில்லை. வீதியில் அப்படி எந்தவொரு அழகுபடுத்தல் வேலையும் நடந்ததாகத் தெரியாத நிலையில், பணிகள் தொடர்பான முறையான அறிக்கைகள் இன்றி பணத்தைப் பெற முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இந்த நிலையில்தான் திரைப்படத்தில் வெட்டாத கிணற்றைப் பார்வையிட்ட அதிகாரி போல, கமநல சேவைகள் திணைக்கள அதிகாரி ஒருவர் களத்தில் இறங்கினார். நடைபெறவே இல்லாத ஒரு வேலையை நேரில் பார்வையிட்டதாகவும், பணிகள் அனைத்தும் மிகவும் திருப்திகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும் தொழிநுட்ப உதவியாளரின் சிபார்சுடன் பணத்தை வழங்க முடியும் எனவும் கறுக்காய் குளம் கமக்ாகர அமைப்பு பணிகளை திருப்தியாக செய்துள்ளது என குறிப்பு எழுதி கம்பீரமாகக் கையெழுத்திட்டுச் சான்றளித்தார்.
இவ்வாறாக நடக்காத வேலையை நடந்ததாக எழுதி பணத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதிர்ச்சியடைந்த கமக்கார அமைப்பினர் வட மாகாண ஆளுநருக்குக் கடிதம் எழுதி முறைப்பாடு செய்தனர். அந்த மனுவைப் பரிசீலித்த ஆளுநர், உடனடியாக கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பினார். இதனால் பதற்றமடைந்த அதிகாரிகள், ‘தேவரதன் சாட்டுக்கு’ கறுக்காய்குளம் கமக்கார அமைப்பின் உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு கடிதம் அனுப்பி வரவழைத்தனர். ஆனால், அங்கு முறையான விசாரணை எதுவும் நடத்தப்படாமல், அந்த விவகாரத்தை அப்படியே பூசி மெழுகி அமர்த்திவிட்டனர்.
அதிகாரிகள் எவ்வளவோ வித்தைகளைக் காட்டியும், அந்த 2,80,000 ரூபாய் பணம் இன்றளவும் கமக்கார அமைப்பின் வங்கி கணக்கிலேயே பத்திரமாக முடங்கிக் கிடக்கிறது. காகிதத்தில் மட்டுமே அழகுபடுத்தப்பட்ட வீதியும், அதிகாரிகளின் இந்த அசாத்திய ‘சாதனையும்’ கிளிநொச்சி பகுதியில் இப்போது ஒரு பெரிய நகைச்சுவைக் கதையாகவே பேசப்பட்டு வருகிறது.


