யாழில் தனக்கு மார்பகப் புற்றுநோய் என கனடா அங்கிளை ஏமாற்றி 53 லட்சம் சுருட்டிய பெண் உத்தியோகத்தர்!
யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 20 வருடங்களுக்கு மேல் கனடாவில் வசிக்கும் 67 வயதான முதியவர் ஒருவர் தனது கனேடிய ஓய்வூதிய OAS பணத்தினை யாழ்ப்பாணத்தில் உள்ள 34 வயதான திருமணமாகாத பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் இழந்துள்ளதாக தெரியவருகின்றது. தன்னால் குறித்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கான ஆதாரங்களை வைத்து குறித்த பெண்ணுக்கு எதிராக நம்பிக்கை மோசடி என பொலிசாரிடம் முறையிடவுள்ளார்.
2024ம் ஆண்டு யாழில் உள்ள வறியவர்களுக்கு உதவி செய்யும் கனடா மொன்றீறியலில் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் குறித்த ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால் நடாத்தப்படும் வட்சப் குறுாப் ஒன்றின் ஊடாகத் தன்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட குறித்த பெண் உத்தியோத்தர் தனக்கு மார்பகப் புற்றுநோய் என்றும் அதற்கான சிகிச்சை தற்போது நடைபெற்று வருவதாகவும் அதற்காக ஒவ்வொரு ஊசி மருந்து செலுத்துவதற்குமான செலவு ஒரு லட்சத்திற்கு மேல் எனவும் மாதம் இரு முறை அவ்வாறு ஊசி மருந்து 2 வருடங்களுக்கு ஏற்ற வேண்டும் என கூறி நிதி உதவி செய்து தருமாறு கெஞ்சியதுடன் அதற்கான ஆதாரங்களையும் அனுப்பியதாக கூறுகின்றார்.
தான் திருமணம் முடிக்காது இருப்பதற்கு இதுவே காரணம் எனவும் புற்றுநோய் மாறினால் திருமணம் முடிப்பேன் என்றும் கூறியதால் குறித்த முதியவர் இரக்கப்பட்டு தனது சொந்தப் பணத்தை பகுதி பகுதியாக அரச உத்தியோத்தருக்கு அனுப்பியுள்ளார். தான் 70 வயதில் கனேடியப் பென்சன் எடுப்பற்கு தீர்மானித்திருந்த போதும் ( அவ்வாறு கூடிய வயதில் பென்சன் எடுத்தால் அதிக பணம் வரும் என்பதால்) யுவதியின் சிகிச்சைக்காக தான் 65 வயதில் பென்சன் பெற்று குறித்த பணத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
2024ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து இன்றுவரை 53 லட்சத்து 37 ஆயிரம் ரூபா குறித்த அரச ஊழியரான பெண்ணுக்கு அனுப்பியுள்ள ஆதாரங்களை குறித்த முதியவர் தன்வசம் வைத்துள்ளார்.
கடந்த மாத தொடக்கத்தில் வேறு தேவை நிமிர்த்தம் யாழ்ப்பாணம் வந்த குறித்த முதியவர் அரச ஊழியரான யுவதியை பல தடவைகள் சந்திக்க முயன்ற போதும் அந்த யுவதி அதை புறக்கணித்து வந்துள்ளார். இதனால் அவர் வேலை செய்த அலுவலகத்திற்கு சென்ற போது அந்த யுவதி அவரை புறக்கணித்து ஏசி அனுப்பியதாகத் தெரியவருகின்றது. இதனால் விரக்தியுற்ற முதியவர் குறித்த யுவதிக்கு புற்றுநோய் உள்ளதா என அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது அது பொய் என தெரியவந்துள்ளது. இதனால் யுவுதியை நேரில் அவளது வீட்டுக்கு சென்று நியாயம் கேட்க முற்பட்ட போது தன் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சிப்பதாக பொலிசாரிடம் முறையிடுவேன் என யுவதி கூறியதுடன் யுவதியின் சகோதரிகளும் முதியவரை தகாத வார்த்தைகளால் ஏசி சண்டை பிடித்துள்ளார்கள்.
இதன் காரணமாக கடும் கோபமுறு்ற முதியவர் தற்போது சட்ட உதவியுடன் பொலிசாரிடம் யுவதி தொடர்பாக முறைப்பாடு செய்ய ஆயத்தமாகியுள்ளார்.

