குடிவெறி இல்லாத கொக்குவில் மாப்பிள்ளைக்கு வடமராட்சி பெண் வீட்டாரால் ஏற்பட்ட பரிதாபம்!
இது ஒரு சமூகவலைத்தளத்தில் வந்த நகைச்சுவையுடன் கூடிய பதிவாகும்..
குடிவெறி இல்லாத கொக்குவில் மாப்பிள்ளைக்கு வடமராட்ட்சி பெண் வீட்டாரால் ஏற்பட்ட பரிதாபம்
தர்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொக்குவிலை சேர்ந்த 30 வயது தாண்டிய பெடியன். யாழில் உள்ள பிரபல ஆண்கள் கல்லூரியில் கற்று பல்கலைக்கழகம் சென்று தற்போது அரச துறையில் பணியாற்றி வருகிறார்.
அவரது நண்பர் வட்டம் என்பது மொடாக்குடிகாரர்களால் ஆனது. (இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த நண்பர் ஒருவரால் தான்). இருந்தும் தர்சன் குடிவெறி முதலிய எந்த பழக்கமும் இன்றி ஒழுக்கமாக இருந்துள்ளார். பங்குச் சந்தை முதலீட்டிலும் ஈடுபட்டு வந்த தர்சன், அதிக பங்கு இலாபங்கள் தரும் என்ற போதிலும், புகையிலை, DCSL வடி போன்றவற்றின் பங்குகளை தவிர்த்து வந்துள்ளார். அந்தளவுக்கு சமூகப் பொறுப்புள்ளவராக இருந்து வந்துள்ளார்.
இந் நிலையில் இணுவிலை சேர்ந்த புறோக்கர் ஒருவரின் மூலம் வடமராட்சியை சேர்ந்த பெண் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அவ்வளவு தூரம் ஏன் என்று மாப்பிள்ளை வீடு முதலில் யோசித்தபோதும், ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சூரியன்-சனி சேர்க்கை போன்ற சிக்கல்கள் காணப்பட்டமையால், அப் பெண்ணின் குறிப்பு சரியாக பொருந்தி வந்ததனாலும் நிச்சயம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.
நிச்சயம் சிறப்பாக முடிந்த பின்னர், திருமண ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலுக்காக, மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டுக்கு சென்றிருந்தனர்.
அங்கு பெண்வீட்டாரால் சுவையான ஓடக்கரை தட்டைவடை பரிமாறப்பட்டுள்ளது. தர்சனும் வடையை கடித்தவாறு பெண்ணை கடைக்கண்ணால் பார்த்து ரசித்து மகிழ்ந்துள்ளார்.
கதை பேச்சு நீண்டு சென்றது. அப்போது பெண்ணின் அப்பா, தான் தண்ணி அடிக்கும் போது பைட் ஆக தட்டைவடையை எடுப்பதே வழமை என்று தொடங்கியுள்ளார். அப்போது அங்கே இருந்த பெண்ணின் தாய்மாமன், தர்சனை பார்த்து, நீங்கள் தண்ணி அடிக்கிறதா எண்டு கேட்டுள்ளார்.
உடனே பதட்டப்பட்ட தர்சன், ச்சா ச்சா.. நான் அதை தொட்டுப் பார்த்தது கூட இல்ல என்று பதிலளித்துள்ளார்.
அப்போது பெண்ணின் தாயார், ஆம்பிள்ளைகள் எண்டா தண்ணி அடிக்க வேணும்… எண்டு casual ஆக கூறவே தர்சனுக்கு இரத்த அழுத்தம் கூடத் தொடங்கியது… தொடர்ந்து பேசிய தாயார், இந்தக் காலத்தில பித்த உடம்புக் காரர் தான் சத்தி வரும் எண்டு தண்ணி அடிக்காம இருக்கிறாங்கள், மத்தப்படி எல்லாரும் social ஆ குடிக்குறது தானே… தான் கூட இடை இடையே வைன் குடிப்பதாக பெருமைப்பட்டுள்ளார்.
இதனை தர்சனின் அப்பா அம்மாவும் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தது தர்சனை மேலும் அதிர்ச்சியாக்கியுள்ளது. காரணம், தர்சனின் தந்தை தினமும் அரை கல் உம் ஸ்ரோர்ங் ரின் ஒன்றும் சிம்மிளாக அடிப்பாராம்.
எனினும் அங்கு அமைதி காத்த தர்சன், வீடு வந்து நண்பர்களிடம் புலம்பித் தள்ளியுள்ளாராம். தான் ஒழுக்கமாக இருந்ததுக்கு இந்த அவமானம் தேவை தான் என அழுதுள்ளாராம்.
மேலும் பெண்ணை மிகவும் பிடித்துப் போனதால் இருதலைக் கொல்லியாக தவிர்த்து வருகிறாராம்.
இதுபோன்ற சமபவம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் சாவகச்சேரியிலும் இடம்பெற்றிருந்தது.

