புலம்பெயர் நாடுகளில் சினிமா பாணியில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்! லண்டனில் ஈழத் தமிழ் குடும்பஸ்தருக்கு நடந்த சம்பவம்!
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து, புதிய வகை தங்க மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாட்டவர்கள் அதிகளவிலான தங்க நகைகளைத் தவசம் (வசம்) வைத்திருக்கும் நிலையில், அவர்கள் குறிவைக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவின் லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் இந்த மோசடிக்கு உள்ளான நிலையில், அது குறித்த தகவல்கள் அம்பலமாகி உள்ளன. லண்டனில் வசிக்கும் ஈழத் தமிழர் ஒருவருக்கு போலீஸ் நிலையத்திலிருந்து அழைப்பது போன்று மோசடியாளர்கள் உரையாடி உள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது திருடன் ஒருவரைத் தங்க நகைகளுடன் பிடித்துள்ளதாகவும், அவரிடம் உங்கள் வீட்டுத் தகவல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், தங்க நகைகளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
“போலீஸ் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி உங்களின் வீட்டுக்கு வருவார். இதன் போது தாம் வழங்கும் உறுதிப்படுத்தல் இலக்கத்தைக் காண்பிக்குமாறும் மோசடியாளர்கள் இலக்கம் ஒன்றை வழங்குகின்றனர்.”
இதனால் சந்தேகமடைந்த ஈழத் தமிழர், உடனடியாக போலீசாருக்கு அழைப்பெடுத்து, அவர்கள் வழங்கிய இலக்கத்தைக் கொடுத்து விளக்கம் கோரியுள்ளார். அவர்களும், “உண்மையான தகவல்கள் தான், தங்க நகைகளை உறுதிப்படுத்த போலீசார் வீட்டுக்கு வருவார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதுவும் மோசடியாளர்களின் சூட்சுமமான செயல்பாடாகும். அவர்கள் குறிவைக்கும் வீட்டினை நீண்ட நாட்களுக்கு வேவு பார்த்த பின்னரே தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில், குறித்த ஈழத் தமிழர் வீட்டுத் தொலைபேசி எண் ஊடாக அந்தப் போன் ஹேக் (Hack) செய்யப்பட்டு, மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுள்ளது.
போலீஸ் நிலையத்திற்கு மேற்கொண்ட அழைப்பும் குறித்த மோசடி மூலம் மோசடியாளர்களுக்கே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் செயல்பாட்டில் சந்தேகமடைந்த ஈழத் தமிழர், உடனடியாக நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர், இது ஒரு மோசடிச் செயல் எனவும், நீதிமன்ற அனுமதியின்றி போலீசார் வீட்டுக்கு வரமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட ஈழத் தமிழர், பெரும் ஆபத்திலிருந்து தப்பியதுடன், வீட்டிலிருந்த தங்க நகைகளையும் காப்பாற்றியுள்ளார். இவ்வாறான மோசடிகள் பல நாடுகளில் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இது குறித்து தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

