பருத்தித்துறையில் பனம் கூடலில் பாரிய தீபரவல்! நகரசபையின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
பருத்தித்துறை – தும்பபை பகுதியில் உள்ள பனம் கூடல் ஒன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்ட நிலையில் நகரசபை தரப்பினரின் துரித நடவடிக்கையின் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை, நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் பின் வீதியில் உள்ள பனம் கூடலில் நேற்று பி.பகல் 2.00 மணியளவில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இது தொடர்பில் அப்பகுதியில் வசிப்பவர்கள் பருத்தித்துறை நகரசபைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து நகரசபை குடிநீர் தாங்கி வாகனத்தை உடனடியாக அனுப்பி தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக மேலும் அயல் காணிகளில் இருந்த பனை மரங்கள் உள்ளிட்ட வற்றிற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 5.00 மணியளவில் தீ பரவல் முற்றாக கட்டுப்பட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
பனம் கூடலுக்கு மிக அருகாமையில் இருந்த வீட்டில் இளம் கர்ப்பிணி தாய் மற்றும் அவரது கணவர் இருந்த நிலையில் அதிஸ்டவசமாக பாதிப்புகள் இன்றி தப்பித்துள்ளனர். இதே போன்று மேலும் சில வீடுகளில் சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் இருந்த நிலையில் தீயினை கட்டுப்படுத்த சில நிமிடங்கள் தாமதமாகி இருந்திருந்தால் பெரும் சொத்தழிவு ஏற்பட்டிருக்கும் என பாதிக்கப்படவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது சுமார் 30 இற்கு மேற்பட்ட பனை மரங்கள் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. பனம் கூடலுக்கு அருகில் இருந்த இரு வீடுகளில் பகுதி அளவு சேதங்கள் ஏற்பட்டிருந்தன. இதப்போது பிளாஸ்ரிக் கதிரைகள், மீன் தொட்டி, கண்காணிப்பு கமரா உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. பிரதான மின் விநியோக வடமும் தீ பரவலில் இரண்டு இடங்களில் எரிவடைந்த நிலையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வருகைதந்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததுடன் பாதிக்கப்பட்ட மின் வடத்தையும் சீர் செய்திருந்தனர்.






