கல்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் கோழிக்கூட்டுக்குள் நுழைந்த சிறுத்தை!
அநுராதபுரம் ,திறப்பனை பகுதியில் உள்ள வீடொன்றின் கோழிக்கூட்டுக்குள் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்று, செவ்வாய்க்கிழமை (21) அன்று வனவிலங்கு அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
திறப்பனை, கல்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் கோழிக்கூட்டுக்குள் நுழைந்த முதிர்ச்சியடைந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கோழிகளைத் தாக்கியுள்ளதுடன் இதில் ஐந்து கோழிகள் உயிரிழந்துள்ள நிலையில் சிறுத்தை கூண்டுக்குள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய திறப்பனை வனவிலங்கு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி பி.ஏ.பி. அத்துகோரல தலைமையிலான குழுவினர், குறித்த இடத்திற்கு விரைந்து சிறுத்தையை மீட்டுள்ளனர்.
அத்துடன் அழிந்து வரும் வனவிலங்கு இனங்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்ட அதிகாரிகள், இவ்வாறான சம்பவங்கள் நடந்தால் பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறும், உடனடியாக 1992 என்ற வனவிலங்கு அவசர இலக்கத்திற்கோ அல்லது அருகிலுள்ள வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

