புதினங்களின் சங்கமம்

யாழில் கணவனுக்கு பால் கொடுக்க முற்பட்ட இளம் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

கடல் தொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை பால் தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான குடும்பப்பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரை வீதி பாசையூர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான நிரோசன் வின்சியா (வயது 26), என்ற இளம் குடும்ப பெண் இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு தேனீர் வைப்பதற்கு அடுப்பினை பற்ற வைத்துள்ளார். இதன்போது மண்ணெண்ணை அடுப்பின் மூடி சரியாக மூடாத காரணத்தால் சிந்திய மண்ணெண்ணை விந்தியாவின் ஆடையில் பற்றி தீப்பற்றியுள்ளது. மனைவி தீயில் எரிவதைக் கண்ட கணவன் ஒருவாறு தீயினை அணைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்திருந்தார்.

கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற்படி குடும்ப பெண் நேற்று ( 25) மாலை உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை இடம்பெற்றது. வைத்தியசாலையில் இறப்பு விசாரணையை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.