அவுஸ்ரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த சமிந்திகா கணவரால் கொலை செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள் இதோ!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஹேர்ன்ஸ் ஓக் பகுதியில், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 47 வயதான சமிந்திகா ஜயவர்தன மற்றும் அவரது 46 வயதுடைய துணைவர் ஆரோன் ஹம்மண்ட் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஒரு ‘கொலை-தற்கொலை’ முயற்சியாக இருக்கலாம் என விக்டோரியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மதியம், மெல்போர்னுக்கு கிழக்கே உள்ள இவர்களது இல்லத்தில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அண்டை வீட்டார்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் வார இறுதியிலேயே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அப்பகுதி மக்கள் சமிந்திகாவை ஒரு அன்பான மற்றும் அமைதியான நபர் என விவரித்துள்ளனர். சமிந்திகாவின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது நெருங்கிய நண்பர்கள், மெல்போர்னில் இருந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து அங்கிருந்த அவர்களது வளர்ப்புப் பூனையை பொறுப்பேற்றுக்கொண்டனர். சமிந்திகா தங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினரைப் போன்றவர் என அவர்கள் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வேறு எவரையும் பொலிஸார் தேடவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா பொலிஸார்ர தெரிவித்துள்ளனர்.




