புதினங்களின் சங்கமம்

யாழில் செலான் வங்கி முகாமையாளரின் திருவிளையாடல்!! கவரிங் நகை மூலம் ஒரு கோடி பணம் சுருட்டினார்!! 4ம் திகதிவரை விளக்கமறியல்!!

செலான் வங்கியின் சங்கானை கிளையில் கவரிங் நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் மூவர் என நால்வர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன், தலைமறைவாகியுள்ள முகாமையாளரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா பிறப்பித்தார்.

செலான் வங்கியின் சங்கானைக் கிளையில் பணியாற்றிய முகாமையாளர் மற்றும் கடன் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர், வாடிக்கையாளர்கள் மூவர் என ஐந்து பேர் இணைந்து தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை அடகுவைத்து முற்பணம் பெற்றிருந்தனர்.

இந்த மோசடி 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற நிலையில் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்த முகாமைத்துவம், மோசடி தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வங்கி அலுவலகர்கள் ஐவருக்கும் எதிராக முதல் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரையும் நீதிமன்றின் உத்தரவில் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வங்கிக் கிளையின் முகாமையாளர் ரமணன் என்பவர் தலைமறைவாகிய நிலையில் உத்தியோகத்தர் மற்றும் 3 வாடிக்கையாளர்களையும் கைது செய்தனர். அவர்கள் நால்வரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று (செப்ரெம்பர் 20) வெள்ளிக்கிழமை முற்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேகநபர்கள் நால்வரையும் வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் தலைமறைவாகியுள்ள முன்னாள் முகாமையாளரைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பிடியாணை உத்தரவையும் நீதிவான் பிறப்பித்தார்.