புதினங்களின் சங்கமம்

வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்தின் அலங்கோலம்..!! அதிகாரிகள் பாராமுகம்..!!

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது இடங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருத்தல் அவசியமானது… பாடசாலைகள், வைத்தியசாலைகள் முதற்கொண்டு சனசமூக நிலையங்கள் வரை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களாகும். இவற்றை சுத்தமாக பேண வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.இதனை விட அந்தந்த நிறுவனங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளின் மேலான கடமையுமாகும்.சரியான முறையில் ஊழியர்களை பயன்படுத்தி இவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். இதற்காகவே அவர்கள் அரசாங்கத்திடம் கை நீட்டி சம்பளம் வாங்குகிறார்கள்.அண்மைக்காலமாக வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்திலுள்ள முகம் கழுவப் பயன்படும் பீங்கான் கோப்பைகள் உடைந்த நிலையில் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றன.. உரிய முறையில் சரியான பராமரிப்பு இன்றி பஸ் நிலையம் காணப்படுவதையே மேற்படி படங்கள் உணர்த்துகின்றன.தூர இடங்களிலிருந்து பஸ் நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் குடிநீர்த் தேவைக்கு பயன்படும் முகம் கழுவும் கோப்பைகளை இவ்வாறு பாவனைக்கு உதவாது செய்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது வவுனியா நகர சபையின் கடமையாகும். சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் மிக விரைவாக நடவடிக்கையெடுத்து, இதனை மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.ஆனால், பல இடங்களிலும் அரச அதிகாரிகள் தமது கடமைகளில் பராமுகவே இருக்கிறார்கள். இது இன்று, நேற்று மட்டுமல்ல. காலத்துக்கு காலம் இலங்கையில் இப்படித் தான் இருக்கின்றது. ஆனால் இவ்வாறான அதிகாரிகளால் அசௌகரியங்களை எதிர்நோக்குவது அப்பாவிப் பொதுமக்கள் தான்.ஒவ்வொருவரும் இந்த நாடு எம் அனைவருக்கும் சொந்தமானது. இவற்றை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.காலத்துக்கு காலம் மாறும் அரசாங்கங்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி, சரியான அதிகாரிகளை நியமித்து, சிறந்த முறையில் கண்டிப்புடன் வழி நடத்தினால், இவ்வாறான அலங்கோலங்கள் எல்லாம் இருக்காது.